பணமதிப்பிழப்பு வழக்கில் ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக ஒத்திவைக்க கோரிய அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி-யிடம் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நீதிபதிகள் கடிந்து கொண்டனர்.
500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அனைத்தும் இன்னும் நாலு மணிநேரத்தில் செல்லாக் காசாகிவிடும் என்று 2016 ம் ஆண்டு நவம்பர் 8 ம் தேதி இரவு அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு வெளியாகி முழுமையாக ஆறு ஆண்டுகள் கடந்த பின்னும் இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு இதுவரை அதற்கான காரணத்தை விளக்கி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவில்லை.
நீதிபதிகள் எஸ் அப்துல் நசீர், பி ஆர் கவாய், ஏஎஸ் போபண்ணா, வி ராமசுப்ரமணியன் மற்றும் பி வி நாகரத்னா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்பு அக்டோபர் 12 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இதனை ஒத்திவைக்குமாறு அட்டர்னி ஜெனரல் கோரிக்கை வைத்தார்.
ரிசர்வ் வங்கி சட்ட பிரிவு 26 ஏன் பயன்படுத்தப்பட்டது என்பதை விளக்கி விரிவான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசு மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியிடம் கேட்டுக் கொண்டதோடு பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் நன்மை தீமைகள் பற்றிய விவாதங்கள் பற்றிய விவரங்களையும் கோரி இந்த வழக்கை நவம்பர் 9 ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இந்த நிலையில், பிரமாணப் பத்திரம் இன்னும் தயாராகவில்லை என்று கூறி வழக்கை மேலும் ஒரு வாரம் ஒத்திவைக்க வேண்டும் என்று நேற்றைய விசாரணையின் போது அட்டர்னி ஜெனரல் மீண்டும் கோரிக்கை வைத்தார்.
இதற்கு எதிர்தரப்பு வழக்கறிஞர் ஷியாம் திவான் கடுமையாக ஆட்சேபம் தெரிவித்தார். அரசியல் சாசன அமர்வு முன்பு வழக்கை ஒத்திவைக்கக் கோருவது முன்னெப்போதும் நடந்திறாதது என்றும் இது தவறான முன்னுதாரணமாக மாறிவிடும் என்றும் கூறினார்.
வெங்கடரமணியின் கோரிக்கை குறித்து மற்றொரு மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ப. சிதம்பரத்திடம் கருத்து கேட்டபோது இது நீதிமன்றத்தை தர்மசங்கடப்படுத்தும் முயற்சி என்றும் இதுகுறித்த முடிவை நீதிபதிகளிடமே விட்டுவிடுவதாகவும் கூறினார்.
இது குறித்து கருத்து தெரிவித்த நீதிபதி நாகரத்னா, “பொதுவாக அரசியல்சாசன அமர்வு முன் விசாரணைக்கு வரும் வழக்கை ஒத்திவைப்பதில்லை. இந்த வழக்கை விசாரிக்காமல் ஆரம்ப நிலையிலேயே ஒத்திவைப்பது மிகவும் வேதனையளிப்பதாக உள்ளது” என்று கூறினார்.
அதற்கு அட்டர்னி ஜெனரல் வெங்கடரமணி வழக்கை ஒத்திவைக்கக் கோருவது தனக்கும் சங்கடமாக உள்ளதாக தெரிவித்தார்.
“பணமதிப்பிழப்பு தொடர்பான விசாரணையை நவம்பர் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும் மற்ற அரசியலமைப்பு பெஞ்ச் விஷயங்களை நவம்பர் 15 ஆம் தேதி விசாரிக்க உள்ளதாகவும் அந்த வழக்குகளை ஒத்திவைக்க வேண்டாம்” என்று அட்டர்னி ஜெனரலிடம் நீதிபதி நசீர் கண்டிப்புடன் கேட்டுக்கொண்டார்.
அக்டோபர் 12 ம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது ஆஜரான மூத்த வழக்கறிஞர் ப. சிதம்பரம், பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அவசரமாக அமல்படுத்த அரசு முடிவு செய்தது குறித்து கேள்வி எழுப்பினார்.
எதற்காக அரசு இந்த அவசர நடவடிக்கையில் இறங்கியது ? இதன் பின்விளைவுகள் மற்றும் நன்மை தீமைகள் குறித்து ஏதேனும் ஆலோசனை நடந்ததா ? இதுகுறித்து நவம்பர் 7 ம் தேதி ரிசர்வ் வங்கி முன் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை மத்திய அரசிடம் இருந்து நீதிமன்றம் கேட்டுப் பெறவேண்டும்.
இந்த முக்கிய ஆவணங்களின் குறிப்பு பாராளுமன்றத்தில் அல்லது பொது தளத்தில் எங்காவது வெளியிடப்பட்டதா ? என்றும் கேட்ட ப. சிதம்பரம் “அரசு என்ன நினைப்பில் இதனை செயல்படுத்தியது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்” என்று வாதிட்டார்.
இதுகுறித்து அனைத்து கோப்புகளையும் நீதிமன்றத்தின் பார்வைக்கு வைக்க மத்திய அரசு தயாராக இருக்க வேண்டும் என்று அட்டர்னி ஜெனரலிடம் நீதிமன்றம் தெரிவித்தது.
இதற்கு பதிலளித்த வெங்கடரமணி “தேவைப்பட்டால் அனைத்து ஆவணங்களையும் அரசாங்கம் சமர்ப்பிக்கும். ஆனால் நீதிமன்றம் ஒரு அடிப்படை பயிற்சியில் ஈடுபடுவது அவசியமா ?” என்று கேள்வி எழுப்பினார்.
பொருளாதார கொள்கை முடிவுகளை எடுப்பதற்கு முன் அரசாங்கத்தால் பரிசீலிக்கப்படும் சிக்கலான அம்சங்கள் குறித்து நீதிமன்றம் அறிய விரும்புகிறதா ? என்றும் இதுபோன்ற விஷயத்தில் நீதிமன்றம் தலையிட வேண்டுமா ? என்றும் சந்தேகம் எழுப்பினார்.
பொருளாதாரம் உள்நாட்டு விவகாரங்களை மட்டும் உள்ளடக்கியதல்ல உலகப் பொருளாதாரத்துடன் தொடர்புடையது என்று அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி அப்போது தெரிவித்திருந்தார்.