வாஷிங்டன்:
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலம் தொடர்ந்து சாதனை படைத்து வரும் எலான் மஸ்க் உலக பணக்காரர்கள் பட்டியலில் பேஸ்புக் இணைநிறுவனர் மார்க் ஃஜூகர்பெர்க்கை பின்னுக்குத்தள்ளி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலம் விண்வெளி ஆராய்ச்சியிலும், டெஸ்லா நிறுவனத்தின் மூலம் ஆட்டோமொபைல்ஸ் துறையிலும் தொடர் சாதனை படைத்து வந்த எலான் மஸ்க் உலக பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.

உலகம் முழுவதும் எலெக்ட்ரிக் கார்கள் பக்கம் திரும்பும் காரணத்தினாலும், டெஸ்லா நிறுவனத்தின் கார்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் காரணத்தினாலும், டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் அதிக வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

அதேவேளையில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் முதன்முறையாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி சாதனை படைத்துள்ள நிலையில் எலான் மஸ்கின் சொத்து மதிப்பு வளர்ச்சி அடைந்துள்ளது. உலக பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ள எலான் மஸ்கின் சொத்து மதிப்பு 115.4 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது, பேஸ்புக் இணை நிறுவனரான மார்க் ஃஜுக்கர்பெர்கின் சொத்து மதிப்பு 110.8 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. தொடர்ந்து உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் நீடித்து வருகிறார் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், அதே வேளையில் இரண்டாம் இடத்தில் நீடித்து வருகிறார் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ்.