இந்திய உரிமத்திற்கான தொலைத்தொடர்பு விதிமுறைகளுக்கு இணங்க எலோன் மஸ்க்கிற்குச் சொந்தமான ஸ்டார்லிங்க் நிறுவனம் ஒப்புதல் அளித்திருப்பதாக ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் உள்ளிட்ட இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள், ஸ்டார்லிங் நிறுவனம் இந்தியாவுக்குள் நுழைவது குறித்து கடந்த சில நாட்களுக்கு முன் கவலை தெரிவித்திருந்தன.
செயற்கைக்கோள் ஸ்பெக்ட்ரம் எவ்வாறு விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் மற்றும் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்பது குறித்து உலகளாவிய செயற்கைக்கோள் நிறுவனங்களான ஸ்டார்லிங்க் மற்றும் அமேசானின் ப்ராஜெக்ட் கைப்பர் மற்றும் இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இடையே கடந்த வாரம் சூடான விவாதம் நடைபெற்றது.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, இந்திய தொலைத்தொடர்பு விதிமுறைகளுக்கு இணங்க ஒப்புக்கொண்டால், எந்தவொரு சேவை வழங்குனருக்கும் உரிமம் வழங்க இந்தியா தயாராக உள்ளது என்றார்.
“ஸ்டார்லிங்க் உட்பட யாருக்கும் உரிமம் வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம். அவர்கள் எங்கள் எல்லா விதிமுறைகளுக்கும் இணங்க வேண்டும்.
அனைத்து தரவையும் இந்தியாவிலேயே பாதுகாப்பாக சேமிப்பது உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் கவனிக்கப்படுவதை நாம் பார்க்க வேண்டும்.
தரவு உள்ளூர் மயமாக்கல் உள்ளிட்ட உரிமம் வழங்க தேவையான அனைத்து விதிமுறைகள் மற்றும் நடவடிக்கைகளை பூர்த்தி செய்தால் உரிமம் கிடைக்கும். அப்படிச் செய்தால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவோம்,” என்று கூறியிருந்தார்.
இதையடுத்து இந்தியாவில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட செயற்கைக்கோள் பிராட்பேண்ட் நிறுவனங்கள் விரைவில் இந்தியாவிற்குள் நுழைய வழி வகுத்துள்ளது.
இந்த நிலையில் இந்திய உரிமத்திற்கான தொலைத்தொடர்பு விதிமுறைகளுக்கு இணங்க எலோன் மஸ்க்கிற்குச் சொந்தமான ஸ்டார்லிங்க் நிறுவனம் ஒப்புதல் அளித்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இருந்தபோதும், ஸ்டார்லிங்க் இது பற்றிய விரிவான திட்டத்தை இன்னும் சமர்ப்பிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
ஸ்டார்லிங்க் மற்றும் அமேசான் உள்ளிட்ட உலகளாவிய செயற்கைக்கோள் ஆபரேட்டர்கள் நகரங்களில் செயற்கைக்கோள் பிராட்பேண்டை வழங்க திட்டமிட்டுள்ளனர், இது உள்நாட்டு தொலைதொடர்பு நிறுவனங்களுடன் நேரடி போட்டியை உருவாக்கும் என்று கூறப்படுகிறது.
நகர்ப்புற அல்லது சில்லறை வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்க ஏலம் விடப்பட்ட செயற்கைக்கோள் அலைக்கற்றைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI-யிடம் வலியுறுத்தியுள்ளன.
இருப்பினும், உலகளாவிய செயற்கைக்கோள் ஆபரேட்டர்கள் இந்த யோசனைக்கு எதிராக உள்ளனர், செயற்கைக்கோள் ஸ்பெக்ட்ரம் ஒரு பகிரப்பட்ட வளமாகும், எனவே ஏலம் விடப்படக்கூடாது என்று வாதிடுகின்றனர்.
Starlink மற்றும் Kuiper ஆகிய நிறுவனங்கள் இந்திய தொலைத்தொடர்பு துறையில் கால்பதிக்கும் நிலையில் இது உள்நாட்டு நிறுவனங்களுடன் கட்டண போட்டியை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
அதேவேளையில், 2020ம் ஆண்டு ட்விட்டர் சமூக வலைதளத்தில் இருந்து அமெரிக்க முன்னாள் அதிபர் வெளியேற்றப்பட்ட பிறகு அந்த நிறுவனத்தை 2022ல் வாங்கி எக்ஸ் என பெயர் மாற்றம் செய்த எலான் மஸ்க் 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் தேர்தல் பிரச்சார களமாக தனது எக்ஸ் தளத்தை பயன்படுத்தி வாக்கு சேகரித்தார்.
இந்த நிலையில் தற்போது தொலைத்தொடர்பு மூலம் அவர் இந்தியாவில் கால் பதிப்பது தொலைத்தொடர்பு நிறுவனங்களை மட்டுமன்றி இந்திய அரசியலையும் ஆட்டிப்படைக்க வழிவகுக்குமோ என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.