ட்விட்டருக்கு சமாதி கட்டிவிட்டதாக எலன் மஸ்க் தனது ட்விட்டரில் சூசக பதிவு.

ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றி 20 நாட்கள் கூட நிறைவு பெறாத நிலையில் எலன் மஸ்க் நடவடிக்கைகளால் அந்நிறுவனம் சீரழிந்து வருவதாகவும் எலன் மஸ்க் ஒரு பயனற்ற கோடீஸ்வரர் என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

7500 க்கும் அதிகமானோர் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில் வாரத்தில் ஏழு நாட்களும் தான் வேலை செய்வதாகவும் குறைந்தது 120 மணி நேரம் உழைப்பதாகவும் 16 லட்சம் கோடி ரூபாய் சொத்துக்களுக்கு அதிபதியான எலன் மஸ்க் தெரிவித்தார்.

மேலும், ஊழியர்கள் அனைவரும் இனி அவரவர் இடத்தில் இருந்து பணி செய்வதை நிறுத்திவிட்டு அலுவலகம் வந்து வாரத்திற்கு 80 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்றும் ட்விட்டர் வருமானத்தில் பாதியை 8 $ பயனர் சந்தாமூலம் பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இதற்கு ட்விட்டர் 2.0 என்று பெயரிடப்பட்ட நிலையில், $8 திட்டம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியதை அடுத்து அதனை தற்காலிகமாக நிறுத்தி வைத்தார் மஸ்க்.

தவிர, மஸ்க்-கின் கெடுபிடிகள் தவறான அணுகுமுறைகளால் கொந்தளித்த ஊழியர்கள் அந்நிறுவனத்தில் இருந்து ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்யப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் தங்கள் ராஜினாமா கடிதங்களை நிறுவனத்தின் இ-மெயிலுக்கு அனுப்பியுள்ளதாகவும் இன்றுடன் அவர்கள் ட்விட்டர் நிறுவனத்தை விட்டு வெளியேற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ட்விட்டர் நிறுவன அலுவலகத்தை மூட உத்தரவிட்டுள்ள எலன் மஸ்க் #RIPTwitter என்று சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் ட்விட்டருக்கு சமாதி கட்டியதுபோல் ஒரு புகைப்படத்தை தனது ட்விட்டரில் பதிவிட்டு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.