தென்கொரியா:
ட்விட்டர் நிறுவனத்திற்கு புதிதாக பெண் தலைமை நிர்வாக அதிகாரியை தேர்வு செய்துள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் பரவலாக பயன்படுத்தப்படும் சமூக வலைதளங்களில் ட்விட்டர் மிகவும் பிரபலமான ஒன்று. முதலில் ட்விட்டரின் தலைமை செயல் அதிகாரியாக (சி.இ.ஓ.) ஜாக் டோர்சி செயல்பட்டு வந்தார். இவர் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 29-ந்தேதி பதவி விலகினார். இதனை தொடர்ந்து, ட்விட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பராக் அகர்வால் நியமனம் செய்யப்பட்டார். 10 ஆண்டுகளுக்கு முன்னர் ட்விட்டர் நிறுவனத்தில் பணியில் சேர்ந்த, பராக் அகர்வால் மும்பை ஐ.ஐ.டி.யில் படித்தவர்.
அதன்பின்னர் உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க், கடந்த ஆண்டு அக்டோபர் இறுதியில் ட்விட்டர் நிறுவனத்தை 45 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கினார். ட்விட்டரை கைப்பற்றிய உடன் எலான் மஸ்க், பல்வேறு அதிரடி நடவடிகைகளில் ஈடுபட்டனர். முதல் நடவைக்கையாக ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி (சி.இ.ஓ.) பராக் அகர்வால் மற்றும் தலைமை நிதி அதிகாரி நெட் செகல், ட்விட்டர் சட்ட மற்றும் கொள்கை நிர்வாகி விஜய காடே உள்ளிட்ட உயர் அதிகாரிகளை பணி நீக்கம் செய்தார். அதன்பிறகு புதிய சி.இ.ஓ பதவி காலியாகவே இருந்து வந்தது.
புதிய நபரை தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்திற்கு புதிதாக பெண் தலைமை நிர்வாக அதிகாரியை தேர்வு செய்துள்ளதாக (அந்த நபரின் பெயரை குறிப்பிடாமல்) தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் அறிவித்துள்ள அவர், “ட்விட்டருக்கு புதிய பெண் தலைமை நிர்வாக அதிகாரியை நியமித்துள்ளேன் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் 6 வாரங்களில் பணியை தொடங்குவார்.. தயாரிப்பு மென்பொருள் நிர்வாக தலைவர் மற்றும் தகவல் தொழில்நுட்ப தலைவராக தனது பங்களிப்பு இருக்கும்” என்றும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் ட்விட்டருக்கு புதிய சி.இ.ஓவாக என்.பி.சி யுனிவர்சல் நிறுவன தலைவர் லிண்டா யாக்கரினோ (Linda Yaccarino)நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.