அமெரிக்க அதிபர் தேர்தலின் போது டொனால்ட் டிரம்புக்கு ஆதரவாக களமிறங்கிய உலகின் முன்னணி பணக்காரருக்கு தொழிலதிபருமான எலன் மஸ்க் அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றியைத் தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளார்.

அமெரிக்காவின் மொத்த நிதி நிர்வாகத்தை சீரமைக்கத் தேவையான சிக்கன நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை வழங்கி வரும் மஸ்க் அந்நாட்டின் அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்ய பரிந்துரைத்த நிலையில் உள்நாட்டில் அவருக்கு எதிராக பல்வேறு மாகாணங்களில் தொடர் போராட்டங்கள் மற்றும் எதிர்ப்புகள் எழுந்துள்ளது.

இருந்தபோதும் இதைப் பற்றியெல்லாம் பெரிதும் அலட்டிக்கொள்ளாத எலன் மஸ்க் அமெரிக்க அதிபர் மட்டுமன்றி உலகின் கவனத்தையே தன் வசம் திரும்புவதில் தீவிரம் காட்டி வருகிறார்.

அந்த வகையில், மார்ச் 21 வெள்ளிக்கிழமை பென்டகனில் நடைபெறும் ஒரு மாநாட்டில் எலான் மஸ்க் கலந்து கொள்வார் என்று தி நியூயார்க் டைம்ஸ் மற்றும் தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் ஆகியவை வெளியிட்டிருக்கும் செய்தி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவுடனான போர் சாத்தியக்கூறுகள் தொடர்பாக பென்டகனில் நடைபெற உள்ள அமெரிக்க ராணுவ ரகசிய திட்டம் குறித்து விளக்கக்கூடத்தில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அதிகாரப்பூர்வ ஆலோசகரான மஸ்க் கலந்துகொள்வார் என்று கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்ற போதும், பென்டகன் அதிகாரிகளை மேற்கோள்காட்டி வெளியாகி உள்ள தகவலில், அமெரிக்க அதிபர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க மஸ்க் இந்த கூட்டத்தில் கலந்துகொள்வார் என்றும் அமெரிக்கா சீனாவின் இராணுவத்தை எவ்வாறு எதிர்த்துப் போராடும் என்பதை விளக்கும் 20 முதல் 30 ஸ்லைடுகள் இதில் காண்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், பென்டகனின் போர்த் திட்டங்கள் இராணுவத்தின் மிகவும் பாதுகாக்கப்பட்ட ரகசியங்களில் ஒன்றாகக் கருதப்படும் நிலையில் இந்த கூட்டத்தில் எலன் மஸ்க் பங்கேற்பதாக வெளியான தகவல் அமெரிக்க எதிர்கட்சியினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.