மூணாறு: கேரளாவில் மூணாறு மலைப்பாதையில் காட்டு யானை ஒன்று, 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்தை முடக்கி வாகன ஓட்டிகளை பீதியில் ஆழ்த்தியது.
வாகன ஓட்டிகளை அச்சுறுத்திய அந்த யானையின் பெயர் படையப்பா. அசுரத்தனமான அந்த யானையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இது வரை 13 என்று கூறப்படுகிறது.
ஒரு வாரத்துக்கும் மேலாக, கன்னிமலை நயமக்காடு பகுதியில் உலா வருகிறது. சில நேரங்களில், மலைப்பாதையை மறித்து நின்று கொண்டு அவ்வழியே வரும் வாகன ஓட்டிகளை பீதிக்கு உள்ளாக்குகிறது.
அப்படித்தான் ஒரு சம்பவத்தை மீண்டும் அரங்கேற்றியது அந்த படையப்பா. மூணாறு – மறையூர் செல்லும் சாலையில் முகாமிட்ட படையப்பா, சாலை நடுவே நின்றுகொண்டு வாகனங்களை இரண்டு புறமும் செல்லவிடாமல் தடுத்தது. படையப்பாவின் இந்த செயலால், வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர்.என்ன செய்வது என்று தெரியாமல் மிரண்டனர்.
தகவலறிந்து, அந்த குறிப்பிட்ட இடத்துக்கு வந்த வனத்துறையினராலும் படையப்பாவை ஒன்றும் செய்ய முடியவில்லை. எங்கும் நகராமல் அங்கேயே நின்று கொண்டு, வாகன ஓட்டிகளை அச்சுறுத்தியது.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் ஒரு வழியாக, அதுவே தன்னை சமாதானம் செய்து கொண்டு, அந்த இடத்தைவிட்டு அகன்று சென்றது. படையப்பாவின் இந்த ஒரு மணி நேர பயமுறுத்தலால் அப்பகுதியினர் பீதி அடைந்தனர்.