சென்னை: 100யூனிட் இலவச மின்சாரம் உள்பட மின்மானியம் பெறுபவர்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

தமிழக மின் வாரியம், 11 லட்சம் குடிசை வீடுகளுக்கு முழுதும்; 2.22 கோடி வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவசமாகவும்; 500 யூனிட் வரை மானிய விலையிலும் மின்சாரம் வழங்குகிறது. இதற்காக ஆண்டுக்கு 3,650 கோடி ரூபாய் செலவு ஏற்பட்டது. இந்த தொகையை மின் வாரியத்திற்கு, தமிழக அரசு மானியமாக வழங்குகிறது. இந்த நிலையில் இலவச மின்சாரம் பெறுவோர் தங்களது ஆதார் எண்ணை மின்வாரிய இணைப்பு எண்ணுடன் இணைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக தமிழகஅரசு வெளியிட்டுள்ள அரசாணையில், மத்திய அரசின் மின்சார வழிகாட்டுதலின்படி, இலவச மின்சாரம் பெறுபவர்கள், மின் மானியம் பெறுபவர்கள், விவசாயிகள், 100யூனிட் இலவச மின்சாரம் பெறுபவர்கள், தங்களது மின்வாரி எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க  அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இலவச மின்சாரம் பெறும் மின் நுகர்வோர் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும், ஆதார் சட்டம் 2016 பிரிவு 7-ன் கீழ், மானியம் பெறும் அனைத்து மின் நுகர்வோர்களும் தங்களது ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு வழிகாட்டுதலின்படி, தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.

அதன்படி, முதல் 100 யூனிட்டை இலவசமாக பெறும் வீட்டு நுகர்வோர், இலவச மின்சாரம் பெறும் குடிசை நுகர்வோர் மற்றும் விவசாயிகள், 750 யூனிட் இலவச மின்சாரம் பெறும் விசைத்தறி நுகர்வோர் மற்றும் 200 யூனிட் இலவசமாக பெறும் கைத்தறி நுகர்வோர்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், தொழிற்சாலைகள், நிறுவனங்கள் போன்ற மானியம் பெறாத மின் நுகர்வோர்கள் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம் இல்லை. ஒரே வளாகத்தில் அதிக இணைப்புகள் வைத்திருப்போர், பிற மோசடிகளில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிக்கவே ஆதார் எண்ணை மின் நுகர்வோர் இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, மின் நுகர்வோரின் மின் இணைப்பு எண்ணுடன், ‘ஆதார்’ எண்ணை இணைக்கும் திட்டத்திற்கு, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த பணி விரைவில் துவங்கப்படும் என்று கூறனிர்.