சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதி உள்பட சென்னையின் பல பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், சுமார் 30 மணி நேரமாக  மக்கள் மின்சாரம் இல்லாமல் அவதி பட்டு வருகின்றனர். ஆனால், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியோ, மழைநீர் வடிந்தபிறகுதான் மின்சாரம் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் இன்று 3வது நாளாக தொடர் மழை நீடித்து வருகிறது.  கடந்த இரண்டு நாட்களாக கொட்டித்தீர்த்த கனமழையால் நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. சென்னை நகர சாலைகள் முழுவதும் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் சிரமத்திற்கு ஆளாகினர். வெள்ளத்தில் சிக்கித்தவிக்கும் மக்களை தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர். எங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இந்த நிலையில், மழை இன்றும் நாளையும் நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. தொடரும் கனமழை காரணமாக,  தமிழகத்தின் 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மழை மற்றும் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால், சென்னையின் பல பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு முதல் மின்விநியோகம் நிறுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக முதல்வர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூர் சிவசக்தி நகர், காந்தி நகர், சீனிவாசநகர், ரெட்டேரி உள்பட பல  பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் மின்விநியோகம் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். மின்சாரம் இல்லாததால், மோட்டார் போட்டு அவசர சேவைகளுக்கு தண்ணீர் பிடிக்க முடியாத நிலையிலும், சாலையில் தேங்கி உள்ள தண்ணீரால், சாக்கடைகளும் நிரப்பி வழிவதால் கடுமையாக  அவஸ்தை பட்டு வருகின்றனர். பல பகுதிகளில் இன்னும் தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது.

இதுமட்டுமின்றி,  தொடர்மழை காரணமாக சென்னையில் உள்ள அனைத்து சுரங்கப்பாதைகளும் மழை தண்ணீரால் நிரம்பி உள்ளதால், போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

வெள்ள நிவாரண முகாம் வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களை தங்க வைப்பதற்கு ஏதுவாக சென்னையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை 24 மணி நேரமும் திறந்து வைக்க தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்யவும், மின் கசிவு ஏற்படாத வகையில் பார்த்து கொள்ளவும் அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி,  மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண டார். பின்னர்  பல பகுதிகளில் 24 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் நிறுத்தப்பட்டது ஏன் என்று விளக்கம் அளித்தார்.

அப்போது, மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் மின்கசிவால் உயிரிழப்பு ஏற்பாமல் தடுக்கவே மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது என்றும், முன்னேற்பாடு நடவடிக்கை காரணமாக மின்சாரத்தால் ஏற்படும் உயிரிழப்பு தடுக்கப்பட்டதாகவும், உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்கவே மின்விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும்  கூறினார்.  சென்னையில் 0.27 சதவிகிதம் பகுதிகளுக்கு மட்டுமே மின்சாரம் தடைபட்டுள்ள தாகவும் மழைநீர் வடிந்து இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னர் மின் விநியோகம் சீராகும் என்றும் கூறினார்.

சாலைகளில் தேங்கி உள்ள தண்ணீரை வெளியேற்றவே இதுவரை  நடவடிக்கை எடுக்காத நிலையில், எப்போது மின்சாரம் வரப்போகிறது என்று பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.