சென்னையில் மின்சார பேருந்துகள் இயக்க OHM குளோபல் மொபிலிட்டி நிறுவனத்துடன் மாநகர போக்குவரத்துக்கு கழகம் செய்துள்ள ஒப்பந்தத்தின்படி 2025 ஏப்ரல் மாதம் முதல் சென்னையில் மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
இதற்காக 500 தாழ்தள எலெக்ட்ரிக் பேருந்துகள் மற்றும் 100 ஏ.சி. எலெக்ட்ரிக் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் வாங்க உலக வங்கி ஒப்புதல் வழங்கியுள்ளது.
அசோக் லேலண்ட் மற்றும் ஸ்விட்ச் மொபிலிட்டியின் துணை நிறுவனமான OHM, EVEY டிரான்ஸ் மற்றும் ஏரோகிள் ஆட்டோமொபைல்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் சென்னையில் மின்சார பேருந்துகளை இயக்க விண்ணப்பித்த நிலையில் ஸ்விட்ச் மொபிலிட்டியால் தயாரிக்கப்படும் பேருந்துகளை இயக்கும் சென்னையைச் சேர்ந்த OHM நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
12 ஆண்டுகளுக்கான இந்த மொத்த செலவு ஒப்பந்தத்தின் கீழ் (Gross Cost Contract – GCC), பேருந்துகளை வாங்குதல், இயக்குதல் மற்றும் பராமரித்தல், உதிரி பாகங்கள் வாங்குதல் மற்றும் பேருந்து ஓட்டுநர்களை பணியமர்த்துதல் ஆகியவற்றுக்கு OHM பொறுப்பாகும். பேருந்துகளுக்கான மின்சார சார்ஜிங் உள்கட்டமைப்பு மற்றும் டிப்போ பராமரிப்பு பணிகளுக்கும் ஆபரேட்டர் பொறுப்பு.
2019ல் சோதனை முறையில் இயக்கப்பட்ட ஒப்பந்த AC பேருந்துகளில் வசூலித்தது போல் பயணிகளிடமிருந்து டிக்கெட் கட்டணத்தை வசூலிக்க MTC ஒரு நடத்துனரை நியமிக்கும்.
பேருந்து வழித்தடங்கள், நடத்துனர்கள் மற்றும் டிக்கெட் கட்டணங்களை வசூலிப்பது ஆகியவை MTCயின் பொறுப்பாகும்.
டீசல் பேருந்துகளை இயக்குவதற்கு ஒரு கி.மீ.க்கு ரூ.116 செலவாகும் நிலையில், ஏசி அல்லாத இ-பஸ்களுக்கு ஒரு கி.மீ.க்கு ரூ.77.16 மற்றும் ஏ.சி.-இ-பஸ்களுக்கு ஒரு கி.மீ.க்கு ரூ.80.86-ஐ OHM நிறுவனத்துக்கு MTC செலுத்தும் என்று போக்குவரத்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
“GCC மாதிரியின் கீழ், MTC இந்த பேருந்துகளின் கொள்முதல், பராமரிப்பு செலவுகள் மற்றும் ஓட்டுநர்கள் மற்றும் தொழில்நுட்ப ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது என சுமார் 875 கோடி ரூபாய் மூலதனச் செலவைத் தவிர்க்க முடியும்” என்று அமைச்சர் கூறினார்.
பெரும்பாக்கம், தண்டையார்பேட்டை-1, பூந்தமல்லி, வியாசர்பாடி மற்றும் பெரம்பூர்-2 ஆகிய டெப்போக்களில் இருந்து சென்னையின் அனைத்து பகுதிகளுக்கும் இந்த பேருந்துகள் இயக்கப்படும்.
உலக வங்கி திட்டத்தின் விதிமுறைகளின்படி, MTC மற்றும் போக்குவரத்துத் துறை பொது போக்குவரத்து சேவை ஒப்பந்தத்தில் (PTSC) கையெழுத்திட்டுள்ளன, இது நம்பகத்தன்மை இடைவெளி நிதியை செலுத்துவதை உறுதி செய்கிறது. இத்திட்டத்தின் மொத்தச் செலவு தோராயமாக ரூ.959 கோடியாகும், இதில் 70% உலக வங்கியும், 30% மாநில அரசின் பங்களிப்பும் ஆகும்.
நிதி ஒதுக்குதல் மற்றும் புதிய பேருந்துகளை இயக்க அனுமதி வழங்குவது ஆகியவை ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட சாதனைகளை அடைவதன் மூலம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.