டெல்லி: தேர்தல் பத்திரம் விவகாரத்தில், உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றியது தொடர்பாக பிரம்மான பத்திரம் தாக்கல் செய்ய எஸ்பிஐ-க்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது. மேலும் பார்கவுன்சில் தலைவர் ஆதிஷ் அகர்வாலாவின் நடவடிக்கை அருவருப்பாக உள்ளது என்றும், இதில் நாங்கள்  தலையிட மாட்டோம் என்றும் கூறியது.

தேர்தல் பத்திரம் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவை முழுமையாக நிறைவேற்றாமல் எஸ்பிஐ, அது தொடர்பான தகவல்களை  தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்திருந்தது. அதை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதில்,  நிறுவனங்கள் எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு கொடுத்தது என்ற விவரம் முழுமையாக தெரிவிக்கப்படவில்லை.

இதுகுறித்து எதிர்க்கட்சிகள் கூறிய நிலையில், எஸ்பி மீது அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள்,  தேர்தல் பத்திரத்தின் சீரியல் எண் உள்பட மறைக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் மார்ச் 21ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என இன்று மீண்டும் எஸ்பிஐக்கு  உத்தரவிட்டுள்ளது.

வியாழன் மாலை 5 மணிக்குள் எஸ்பிஐ தலைவர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எஸ்பிஐ தனது கைவசம் மற்றும் காவலில் உள்ள எலெக்டோரல் பாண்டுகள் பற்றிய அனைத்து விவரங்களையும் வெளிப்படுத்தியதாகவும், எந்த விவரமும் மறைக்கப்பட வில்லை என்றும் குறிப்பிடுகிறது.

எஸ்பிஐ-யிடமிருந்து தகவல் கிடைத்தவுடன் தேர்தல் ஆணையம் அதன் இணையதளத்தில் விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.


ரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு அறிமுகம் செய்தது. எஸ்பிஐயில் ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.1 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வாங்கி தனி நபர்கள், நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கினர். இதை எதிர்த்து  உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  இந்த வழக்குகள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா, பி.ஆர்.கவாய் ஆகிய 5 பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், பிப்ரவரி 15ந்தேதி பரபரப்பு தீர்ப்பை வழங்கியது.

அதன்படி,  தேர்தல் பத்திரங்கள் செல்லாது. அது அரசியல் சாசனப்படி தவறானது.  இதில் வெளிப்படைத்தன்மை தன்மை இல்லை. தேர்தல் பத்திரங்களை இனி வழங்கக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதுமட்டுமின்றி கடந்த 2019 ஏப்ரல் முதல் இதுவரை விற்பனை செய்யப்பட்ட தேர்தல் பத்திரங்கள் குறித்த முழுமையான விவரங்களை மார்ச் 6க்குள் இந்திய தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கவும், இந்திய தேர்தல் ஆணையம் அதனை இணையதளத்தில் வெளியிடவும் உத்தரவிட்டது.

இதையடுத்த தேர்தல் பத்திர விவரங்கள் வழங்க எஸ்பிஐ காலஅவகாசம் கோரியது. உச்சநீதிமன்றம் மறுத்த நிலையில் கடந்த 12ம் தேதி எஸ்பிஐ சார்பில் தேர்தல் பத்திர விபரங்கள் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்த நிலையில் கடந்த 14ம் தேதி இணையதளத்தில் வெளியானது. அதில் நிறுவனங்கள் வழங்கிய நன்கொடை தொடர்பான விபரம் என்பது 337 பக்கங்களிலும், கட்சிகள் பெற்ற நன்கொடை விபரம் என்பது 426 பக்கங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் தேர்தல் பத்திரங்களின் சீரியல் எண்கள் வெளியிடப்படவில்லை. இதனால் எந்த கட்சிக்கு எந்த நிறுவனம் எவ்வளவு நன்கொடை செய்தனர் என்ற விவரம் தெரியாமல் போனது.  இதை மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.  இதனால் உச்சநீதிமன்றம் அதிருப்தியடைந்தது.

இதையடுத்து வழக்கை மீண்டும் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திர எண்கள் உள்பட முழுவிபரத்தையும் எஸ்பிஐ வெளியிட வேண்டும் எனக்கூறியதோடு தேர்தல் பத்திரம் எண்ணை வெளியிடாதது பற்றிய அடுத்த விசாரணையின்போது விளக்கம் அளிக்க வேண்டும் எனக்கூறிய வழக்கை இன்றைய தினத்துக்கு ஒத்திவைத்தது. அதன்படி வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது  ‛‛தேர்தல் பத்திரங்கள் சார்ந்த முழு விபரங்களையும் எஸ்பிஐ வெளியிட வேண்டும். இதுதொடர்பாக அனைத்து விபரங்களை வெளியிட நாங்கள் விரும்புகிறோம். ஒவ்வொரு தேர்தல் பத்திரங்களில் உள்ள தனி அடையாள எண்ணை (சீரியல்) கட்டாயம் வெளியிட வேண்டும். தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக மறைக்கப்பட்ட அனைத்து தகவல்களும் வெளியிட வேண்டும். எஸ்பிஐ என்பது நேர்மையாகவும், நியாயமாகவும் இருக்க வேண்டும்.

தேர்தல் பத்திர விவரங்களை தரச்சொன்னால் மட்டுமே நாங்கள் வழங்குவோம் என்ற மனப்பான்மையில் எஸ்பிஐ உள்ளது. இதனால் தேர்தல் பத்திரம் தொடர்பாக அனைத்து விவரங்களையும் மார்ச் 21ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அன்றைய தினமே தேர்தல் ஆணையம் அதனை இணையதளத்தில் வெளியிட வேண்டும் ” என அதிரடியாக உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.

முன்னதாக விசாரணையின்போது, தேர்தல் பத்திரம் தொடர்பான தீர்ப்பை நிறுத்தி வைக்குமாறு உச்சநீதிமன்ற பார்கவுன்சில் தலைவர் ஆதிஷ் அகர்வாலா, குடியரசு தலைவருக்கு எழுதிய கடிதம் தொடர்பாக விசாரிக்க கோரப்பட்டது. இதை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி சந்திரசூட்,    பார்கவுன்சில் தலைவர் ஆதிஷ் அகர்வாலாவிடம், “நீங்கள் ஒரு மூத்த வழக்கறிஞராக இல்லாமல், SCBA இன் தலைவர்.  உங்களுடைய சுய அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒரு கடிதம் எழுதியுள்ளீர்கள். இவை அனைத்தும் விளம்பரம் தொடர்பானவை… நாங்கள் இதில் தலையிட மாட்டோம். என்னை எதுவும் சொல்ல வேண்டாம். இது ஒரு  அருவருப்பான செயல் என்றும் விமர்சித்தார்.