புதுடெல்லி:

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தும், தேர்தல் நடப்பதால் இந்தியாவில் பெட்ரோல்,டீசல் விலையை  உயர்த்தவில்லை.


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெ விலை கடந்த மார்ச் மாதத்திலிருந்து 9 டாலராக உயர்ந்துள்ளது. ஆனால், இந்தியாவில் சராசரியாக பெட்ரோல் விலை 50 காசுகள் மட்டுமே உயர்த்தப்பட்டு வருகிறது.

2019-ம் ஆண்டில் முதல்முறையாக கச்சா எண்ணெய் பாரலுக்கு 75 டாலராக உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை ஏற்ற முடியாத அளவுக்கு எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுத்துள்ளது.

தேர்தல் முடியும் வரை விலை உயர்வு இருக்கக் கூடாது என எண்ணெய் நிறுவனங்களுக்கு திட்டவட்டமாக மத்திய அரசு கூறிவிட்டதாகத் தெரிகிறது.

இதற்கிடையில், பொருளாதார தடை விதிக்கப்பட்ட ஈரானில் இருந்து எண்ணெயை இறக்குமதி செய்ய இந்தியாவுக்கு வழங்கப்பட்ட அனுமதியை அமெரிக்கா ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

இதுவும் பெட்ரோலியப் பொருட்களின் விலையை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்று கூறப்படுகிறது.
மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் முதல் வேலையாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உடனே உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.