என். சொக்கன்
ஒவ்வொரு தேர்தலின்போதும் கூட்டணிகள் அமைகின்றன, மொத்தமுள்ள தொகுதிகளை உனக்கு இவ்வளவு, எனக்கு இவ்வளவு என்று பிரித்துக்கொள்கிறார்கள். இதனைத் தொகுதிப் பங்கீடு என்கிறார்கள்.
‘ஈடு’ என்ற சொல்லுக்குப் பல பொருள்கள் உண்டு. நாம் பரவலாகப் பயன்படுத்துகிற பொருள், சமம்/இணை/ஒப்பு. உதா: ‘வாரிவழங்குவதில் அவருக்கு யாரும் ஈடாகமுடியாது.’
‘இடு’ என்ற பெயர்ச்சொல்லிலிருந்தும் ஈடு வரும். ஒரு நிறுவனத்தில் ஒருவர் முதலீடு செய்திருக்கிறார் என்று சொல்கிறோம், அதன் பொருள், அவர் முதலை (‘முதலையை’ அல்ல) இட்டிருக்கிறார், ஆகவே முதலீடு, அவர் முதலீட்டாளர்.
இன்னொரு முதலீடும் உண்டு. காலையில் முதன்முதலாக மாவை ஊற்றி (இட்டு) வேகவைக்கிற இட்லியை ‘முதல் ஈடு’ என்பார்கள். அதை முதலீடாக வைத்துச் சுறுசுறுப்பாக அன்றைய வேலைகளைத் தொடங்கலாம்!
ஒருவர் தன்னுடைய குறையைச்சொல்லி முறை இடுகிறார், அது முறையீடு, அவர் முறையீட்டாளர்.
அதுபோல, தொகுதிகளைப் பங்கு இடுகிறார்கள், ஆளாளுக்குப் பிரித்துப் பங்குபோடுகிறார்கள், ஆகவே, அது தொகுதிப் பங்கீடு.
‘ஈடு’ என்ற சொல்லிலிருந்து வந்ததுதான் ‘ஈடுபடு’தல், அதாவது பங்கேற்றல், தன்னை ஒரு பணியில் இட்டுக்கொண்டு செயல்படுதல், ஈடுபாடு, செயல்பாடு என இதனை விரிவுபடுத்தலாம்.
இச்சொல்லுக்கு இன்னொரு பொருள், பெருமை என்பது. திருஞானசம்பந்தர் பாடுவார்:
‘வல் அரக்கன் திண்தோள்
ஒக்க இருபதும் முடிகள் ஒருபது ஈடு அழித்து உகந்த எம்மான்.’
வலிமையான அரக்கனான ராவணனின் திண்மையான இருபது தோள்களையும், பத்து தலைகளையும், அதற்கெல்லாம் மேலாக அவனுடைய ஈடு, அதாவது, பெருமையையும் நசுக்கி மகிழ்ந்த எம்மான், சிவபெருமான்.
(தொடரும்)