டெல்லி: மக்களவை தேர்தல் முடிவுகள் நரேந்திர மோடிக்கு அரசியல் மற்றும் தீர்க்கமான தார்மீக தோல்வியாக இருக்கும் என காங்கிரஸ் மூத்த தலைவர்  ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்து உள்ளார். மேலும், பிரதமர் மோடி தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்றும்  வலியுறுத்தி உள்ளார்.

 மக்களவைத் தோ்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில்,  இன்று வாக்கு எண்ணிக்கை  நடைபெற்று வருகிறது. 543 மக்களவைத் தொகுதிகளில் 271 தொகுதிகளில் வெற்றிபெறும் கட்சி ஆட்சி அமைக்கும். இந்த நிலையில், தேர்தலில்   பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி 300 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பாஜக கூட்டணி 400 இடங்களை கைப்பற்றும் என பிரதமர் மோடி உள்பட பாஜக தலைவர்கள் கூறி வந்த நிலையில்,. தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்து கணிப்புகளும் அதையே சொல்லி வந்தன. ஆனால், இண்டியா கூட்டணி தலைவர்கள், ராகுல்காந்தி உள்பட பலர், தேர்தல் கருத்து கணிப்பு அல்ல கருத்து திணிப்பு என குற்றம் சாட்டி வந்தனர்.

இந்த நிலையில், தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரம் பாஜக கூட்டணிக்கு 300 இடங்களாகவது கிடைக்குமோ, ஆட்சி அமைக்க முடியுமா என்பதையே கேள்விக்குறியாகி உள்ளது.  மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு பின்னடவை கொடுத்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளப்பதிவில் வெளியிட்டுள்ள பதிவில், ”கருத்துக் கணிப்புகள் என்னவென்பது முற்றிலும் அம்பலமாகிவிட்டது. இது முற்றிலும் ஒரு ஏமாற்று வேலை. பிரதமர் மோடி திட்டமிட்டு நடத்திய கருத்துக் கணிப்புகள் முழுக்க முழுக்க அம்பலமாகிவிட்டன என்பதும் தெளிவாகிவிட்டது.  இந்த தேர்தல் முடிவுகள், பிரதமர் நரேந்திர மோடிக்கு அரசியலில் தார்மீகமான தோல்வியாக இருக்கும் என்பது தெளிவாகிவிட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்