கொழும்பு
வரும் நவம்பர் 14 ஆம் தேதி இலங்கையில் தேர்தல் நடைபெற உள்ளது.
கடந்த செப். 21-ம் தேதியன்று இலங்கையில் 9 ஆவது அதிபர் தேர்தல் நடைபெற்றது. கடந்த சில ஆண்டுகளாக நீடித்த கடுமையான பொருளாதார நெருக்கடி, அதைத் தொடர்ந்த மிகப்பெரிய போராட்டங்களுக்குப் பிறகு, இலங்கை சந்தித்த முதல் தேர்தல் இது. இத்தேர்தலில் மொத்தம் 38 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் ஜே.வி.பி., எனப்படும், மார்க்சிஸ்ட் ஜனதா விமுக்தி பெரமுனா கட்சி தலைவர் அனுரா குமார திசநாயகே வெற்றி பெற்றார். இவர் அந்நாட்டின் புதிய அதிபராக நேற்று (செப். 24) பதவியேற்றார்.
இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தல் மூலம், தனது தேசிய மக்கள் சக்தி கூட்டணி தலைமையிலான ஆட்சியை அமைக்க விரும்புவதாக புதிய அதிபர் அநுர குமார திசாநாயக தெரிவித்திருந்தார். அதன்படி, அந்நாட்டு நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான சிறப்பு அரசிதழ் அறிவிக்கையில் அதிபர் அநுர குமார திசாநாயக நேற்று (செப். 24) கையொப்பமிட்டார்.
மேலும் நவ.14-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதாகவும், நாடாளுமன்ற முதல் கூட்டம் நவம்பர் 21-ம் தேதி நடைபெறுவதாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் மேலும் 11 மாதங்கள் உள்ளன. இந்நிலையில், முன்கூட்டியே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.