மும்பை

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் மொபைல் இணைக்கப்பட்டதாக வந்த செய்தியை மும்பை தேர்தல் அதிகாரி மறுத்து விளக்கம் அளித்துள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், மராட்டிய மாநிலம் மும்பை வடமேற்கு தொகுதியில் சிவசேனா வேட்பாளர் ரவீந்திர வைகர், 48 வாக்குகள் வித்தியாசத்தில் சிவசேனா (உத்தவ் தாக்கரே) கட்சியின் வேட்பாளர் அமோல் கஜனன் கீர்த்திகரை தோற்கடித்தார்.

வெற்றி பெற்ற வேட்பாளர் வைகரின் மைத்துனர் மங்கேஷ் பண்டில்கர், வாக்கு எண்ணிக்கையின் போது, கோரேகானில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் தடையை மீறி செல்போன் பயன்படுத்தி உள்ளார். எனவே அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒரு நாளிதழில் மங்கேஷ் பண்டில்கர் தொடர்பாக வெளியான செய்தியில்,  அவர் வாக்கு எண்ணிக்கையின்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் இணைக்கப்பட்ட செல்போனை பயன்படுத்தியதாக கூறப்பட்டிருந்தது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீதான நம்பகத்தன்மை குறித்து ஏற்கனவே விவாதம் நீடிக்கும் நிலையில், இந்த செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், வாக்குப்பதிவு இயந்திரத்துடன் இணைக்கப்பட்ட செல்போன் பயன்படுத்தியதாக வெளியான செய்திக்கு தேர்தல் வந்தனா சூரியவன்ஷி மறுப்பு தெரிவித்தார்.

நேற்று மும்பையில் அவர் செய்தியாளர்களிடம்,

“மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தனி அமைப்பு. அதனை அன்லாக் செய்வதற்கு செல்போனுக்கு ஓ.டி.பி. எதுவும் அனுப்ப முடியாது. அதன் புரோகிராமை மாற்றியமைக்க முடியாது.

அது எந்த வயர்லெஸ் தகவல் தொடர்பு வசதிகளும் இல்லாதது. செல்போனுடன் இணைப்பு என்பது சாத்தியம் இல்லாதது. இவ்வாறு அவதூறு மற்றும் பொய்யான செய்தியை வெளியிட்ட செய்தி நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது”

என்று விளக்கம் அளித்துள்ளார்.