டில்லி
நடைபெற உள்ள மக்களவை தேர்தல் இந்தியாவின் ஆன்மாவை காக்க நடக்கும் போர் என ராகுல் காந்தி ஒரு பேட்டியில் கூறி உள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நடைபெறும் மக்களவை தேர்தலில் மோடி துரத்தி அடிக்கபட்டு தாம் பதவிக்கு வருவோம் என்பதில் பெரும் நம்பிக்கையுடன் உள்ளார். அவர் உத்திரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தில் எதிர்க்கட்சிகள் பிரிந்து உள்ளதால் சற்றே ஏமாற்றம் அடைந்துள்ளார். அதே நேரத்தில் அவர் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் அல்லது இடது சாரிகலை எங்கும் தாக்கி பேசுவது இல்லை.
ஆங்கில செய்தி ஊடகமான தி டெலிகிராஃப் ஊடகத்துக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியின் விவரம் பின் வருமாறு :
”எனது பதவி குறித்த கருத்துக்களில் எவ்வித மாற்றமும் உண்டாகவில்லை. குறைவான அதிகாரம் கொண்ட எந்த ஒரு பதவியும் விஷம் என நான் இப்போதும் நம்புகிறேன். அல்லது சொத்துக்களை அதிகரிக்க உதவும் பதவியும் விஷம் என நான் கருதுகிறேன். அரசியலில் உள்ள பலரும் தங்கள் அதிகாரத்தைக் கொண்டு மக்களை கட்டுக்குள் கொண்டு வர முயல்கிறார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. இதன் மூலம் தங்கள் கருத்துக்களையும் கொள்கைகளையும் மக்கள் மனதில் திணிப்பதை நான் வெறுக்கிறேன்.
என் மீதுள்ள கோபம், வெறுப்பு மற்றும் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடே என்னை குறித்த விமர்சனங்களாகும். நான் அதையே அவர்களுக்கு திருப்பி அளிக்க விரும்பவில்லை. கோபத்தை கோபத்தால் வெல்ல முடியாது. நான் பிரதமருக்கு என்னை குறித்த தவறான விமர்சனங்களுக்காக நன்றி செலுத்த விழைகிறேன். அந்த விமர்சனங்கள் எனக்கு பொறுமை உள்ளிட்ட பலவற்றை நிறைய கற்றுக் கொடுத்தது. நமக்கு கற்றுக் கொடுப்பவரை நம்மால் எப்படி வெறுக்க முடியும்? என்னை பிரதமர் வெறுத்தாலும் நான் அவர் மீது அன்புடன் உள்ளேன். ஏனென்றால் அவருக்கு என்மீதுள்ள கோபம் என்பது அவருடைய அவநம்பிக்கையையும் பயத்தையும் காட்டுகிறது.
மேற்கு வங்க மாநிலம் என்பது சற்றே குழப்பமானது. அங்குள்ள அரசியலை எதிர்கொள்வது மிகவும் கடினம். உத்திரப்பிரதேசத்தில் கூட்டணி அமையும் என எதிர்போர்த்தோம். ஆனால் சமாஜ்வாதியும் பகுஜன் சமாஜ் கட்சியும் தனியே சென்று விட்டன. என்ன நடக்கிறது என பார்ப்போம். அதே நேரத்தில் சமாஜ்வாதி – பகுஜன் சமாஜ் – காங்கிரஸ் இடையே கூட்டணி அமைந்திருந்தால் அது பாஜகவுக்கு கடுமையான எதிர்விளைவுகளை அளித்திருக்கும். மாயாவதி காங்கிரசுக்கு எதிராக ஏன் இப்படி நடந்துக் கொள்கிறார் என்பது இன்னும் எனக்கு விளங்கவில்லை.
மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சியுடன் மட்டும் அல்ல மம்தா பானர்ஜி உடனும் எனக்கு நல்ல நட்பு உண்டு. எனக்கு பல எதிர்க்கட்சி தலைவர்களுடனும் தனிப்பட்ட நட்பு உண்டு. ஆனால் எங்கள் கட்சியின் மாநிலத் தலைமை மேற்கு வங்கத்தில் தனித்துபோட்டியிட விரும்பி உள்ளது. மொத்தத்தில் மோடி தோற்கடிக்கப்பட்டால் அது எங்களால் நடந்தது இல்லை. மக்கள் அவரை தோற்கடித்துள்ளனர் என்பதே உண்மையாகும்.
மூன்று கோடி இளைஞர்கள் இந்தியாவில் வேலை இழந்துள்ளனர். பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்துள்ளது. ஆனால் இவைகளை பிரதமர் மோடி இவைகளை ஒப்புக் கொள்வதில்லை. ஊழலும் அதிகரித்துள்ளது. ரூ.30,000 கோடியை தூக்கி அனில் அம்பானியிடம் அளிக்கப்பட்டுள்ளது. அனில் அம்பானிக்கு கடன் திருப்பி செலுத்த பணம் இல்லாததால் அவர் சகோதரர் பணம் கொடுத்து அவர் சிறை செல்வதை தடுக்கிறார். கடன் அடைக்கக்கூட பணம் இல்லாத அனில் அம்பானிக்கு ராணுவ ஒப்பந்தம் அளிக்கப்படுவது விந்தையான விஷயம்.
இவை அனைத்துக்கும் மக்கள் வரும் தேர்தலில் தங்கள் எதிர்ப்பை காட்டி மோடிக்கு பாடம் புகட்டுவார்கள். வேலை இல்லா திண்டாட்டம் இந்த மக்களவை தேர்தலில் அரசுக்கு எதிராக இருக்கும். தற்போது அரசுக்கு எதிராக கருத்து சொல்லும் மக்கள் மிது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. மொத்தத்தில் நடைபெற உள்ள மக்க்ளவை தேர்தல் மக்களின் ஆன்மாவை காக்க நடக்கும் போர் ஆகும்” என ராகுல் காந்தி பேட்டியில் தெரிவித்துள்ளார்.