சென்னை
தேர்தல் பறக்கும் படை அதிகாரி பாபு என்பவர் லஞ்சம் வாங்கியதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் நடைமுறை விதிகள் அமுலுக்கு வந்துள்ளன. வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பதை தடுக்க பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாக பணியில் ஈடுபட்டுள்ளனர். பல இடங்களில் ரொக்கப் பணம் பிடிபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
லஞ்சத்தை தடுக்க பாடுபடும் தேர்தல் பறக்கும் படை அதிகாரியே லஞ்சம் வாங்கியதாக சமீபத்தில் புகார் எழுந்தது. தேர்தல் பறக்கும் படை அதிகாரி பாபு என்பவர் மீது அந்த புகார் கூறப்பட்டது. இது குறித்து தேர்தல அதிகாரி விசாரணை செய்தார்.
அந்த விசாரணையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி பாபு சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த ஜெய்குகன் என்பவரிடம் ரூ.25,000 லஞ்சம் பெற்றது உறுதிப் படுத்தப் பட்டதாக கூறப்படுகிறது. அதை அடுத்து பாபுவை தேர்தல் அதிகாரி பணியிடை நீக்கம் செய்துள்ளார்.