டெல்லி: குஜராத், இமாச்சல் மாநில சட்டமன்ற தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்கப்பட உள்ளதாக அகில இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளது. அப்போது, குஜராத், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் அட்டவணை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2017ம் ஆண்டு குஜராத் மற்றும் இமாச்சலப்பிரதேச சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. ஆட்சி காலமான 5ஆண்டுகள் முடிவடைய உள்ள தால், மீண்டும் மாநில சட்டமன்ற தேர்தலுக்கான தேதிகளை இன்று தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது. இன்று பிற்பகல் 3 மணிக்கு தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிடுகிறது. டிசம்பருக்குள் இரு மாநில சட்டப்பேரவை தேர்தல்களை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டு உள்ளது.
182 தொகுதிகளைக் கொண்ட குஜராத்தில் நடப்பு ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதைபோல 68 தொகுதிகளை கொண்ட இமாசல பிரதேச மாநிலத்திற்கு சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. முன்னதாக குஜராத், இமாச்சல பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் நேரில் சென்று செய்தது. தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே இமாச்சலப் பிரதேசத்துக்கு மூன்று நாள் பயணமாக சென்று ஆய்வு செய்தனர். இதையடுத்து, இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
இரு மாநிலங்களிலும் பா.ஜ. ஆட்சி உள்ளதால், மீண்டும் ஆட்சியை பிடிக்க பா.ஜ. தீவிரம் காட்டிவருகிறது.