கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இன்று தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடியில் நடைபெற்ற வன்முறையின்போது பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, அந்த வாக்குச்சாவடியில் தேர்தலை ஒத்தி வைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேற்குவங்க மாநிலத்தில் 4-ம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. ஹவுரா, தெற்கு 24 பர்கானாஸ், ஹூக்ளி, அலிபுரத்துவார், கூச் பெஹார் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெறுகிறது.
கூச் பெஹார் மாவட்டத்தில் சிதால்குச்சி வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்த இளைஞர் ஒருவர் மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து வன்முறை வெடித்தது. வன்முறையை கட்டுப்படுத்தபாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 4 பேர் உயிரிழந்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து தேர்தல் சிறப்பு பார்வையாளர்கள் கொடுத்த இடைக்கால அறிக்கையின் அடிப்படையில் சிதால்குச்சி வாக்குச்சாவடியான பிஎஸ் 125 இல் வாக்குப்பதிவை ஒத்தி வைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.