சென்னை: தேர்தல் ஆணையம் அனுமதியின்றி எப்படி வாக்காளர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியது தொடர்பான வழக்கில், புதுச்சேரி பாஜகவுக்கு எதிரான புகார் மீதான நடவடிக்கையை தேர்தல் ஆணையம் தொடரலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியில் பா.ஜ.க சார்பில், வாக்காளர்களின் வாட்ஸ்அப் எண்களுக்கு ஆதரவு கோரி தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் கடந்த விசாரணையின்போது, மனுதாரர் அளித்த புகார் குறித்து சைபர் குற்றப் பிரிவு தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், வாக்களர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் பிரச்சாரம் செய்ய பாஜகவினர் தங்களிடம் அனுமதி கோரவில்லை எனவும் தெரிவித்தது. இதுதொடர்பாக சைபர் கிரைம் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வாக்காளர்களின் ஆதார் தகவல்கள் திருடப்படவில்லை என ஆதார் ஆணையம் நீதிமன்றத்தில் பதில் அளித்தது. பாரதியஜனதா கட்சியின் உறுப்பினர்கள் மூலம் பெறப்பட்ட தகவல்கள் அடிப்படையிலேயே வாக்களர்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பப்பட்டதாக புதுச்சேரி பாஜக தரப்பில் தெரிவித்தது. அதுபோல தேர்தல் ஆணையம் சார்பில், தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் பாஜக மீதான புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து பாஜகவுக்கு எதிரான புகார் மீதான நடவடிக்கையை தேர்தல் ஆணையம் தொடரலாம் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அடிப்படை ஜனநாயக உரிமையான வாக்குரிமையை நேர்மையாக செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், பல பிரச்னைகள் உள்ளபோதும் தேர்தலில் நம்பகத்தன்மை ஏற்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.