சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று மற்றும் நாளை வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.  இதை  பொதுமக்கள்  பயன்படுத்திக் கொள்ளுமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

புதியதாக வாக்களிக்க தகுதி பெற்ற நபர்கள், ஜனவரி 1, 2025 18வயது நிரம்பிபவர்கள்  மற்றும் வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அட்டையில் ஏற்பட்டுள்ள பிழைகள் மற்றும் முகவரி மாற்றம் உள்பட பல்வேறு   மாற்றங்களை திருத்திக் கொள்வதற்கு ஏதுவாக வாக்காளர் சிறப்பு முகாம்களை தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது. ஏற்கனவே கடந்த வாரம் சனி, ஞாயிறும் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற்ற நிலையில், இந்த வாரமும் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் இன்று மற்றும் நாளை வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.  மாநிலம் மு முழுவதும் சுமார் 68 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில் நடக்கிறது. பொதுமக்கள் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த முகாமில் புதியதாக வாக்காளர் அட்டை பெற விரும்பும் நபர்கள், வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் திருத்தம், முகவரி திருத்தம் உள்ளிட்ட பல்வேறு திருத்த நடவடிக்கைகளை செய்ய விரும்பும் மக்கள் இந்த இரண்டு நாட்கள் முகாமை பயன்படுத்திக் கொள்ளலாம்.

கடந்த வாரம் நடைபெற்ற இரண்டு நாள் சிறப்பு முகாமில் தமிழ்நாடு முழுவதும் 4 லட்சத்து 42 ஆயிரத்து 35 பேர் தங்களது புதியதாக வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்துள்ளனர்.

வாக்காளர் பட்டியலை பெயரை நீக்க 44 ஆயிரத்து 128 பேரும், தங்களது குடியிருப்பை ஒரு தொகுதியில் இருந்து வேறு தொகுதிக்கு மாற்ற அல்லது தொகுதிக்குள்ளே வேறு ஒரு முகவரிக்கு மாற்ற 1 லட்சத்து 98 ஆயிரத்து 931 பேரும் விண்ணப்பித்து இருந்தனர்.

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை சேர்க்க 419 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

கடந்த வாரம் நடைபெற்ற இரண்டு நாள் முகாமில் மொத்தமாக 6 லட்சத்து 85 ஆயிரத்து 513 பேர் பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம் உள்ளிட்ட காரணங்களுக்காக விண்ணப்பித்துள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் வாக்காளர் சிறப்பு முகாமில் இறந்தவர்களின் பெயர்களை நீக்கிக் கொள்ளவும் அவர்களது குடும்பத்தி னருக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.