பிலிபித், உ.பி.
பிலிபித் புலிகள் சரணாலயத்துக்கு முதியோர்களை கொண்டு போய் விட்டு, அவர்களைப் புலிகள் கொன்றதும் சடலத்தைக் காட்டி இழப்பீடு பெரும் வழக்கம் சில கிராமங்களில் உள்ளதாக ஒரு தகவல் கூறுகிறது.
கடந்த ஃபிப்ரவரி மாதம் முதல், உத்திரப் பிரதேசத்தின் பிலிபித் வன எல்லை கிராமங்களில் ஏழு முதியவர்கள் புலியால் தாக்கப்பட்டு இறந்ததாக இழப்பீடு கேட்டு விண்ணப்பம் வந்துள்ளது. பிலிபித் வனம் புலிகளின் சரணாலயங்களில் ஒன்று
சமீபத்தில் கண்டெடுக்கப்பட்டதாக கூறும் சில சடலங்களையும் அந்த இடத்தையும் ஆராய்ந்த போது, புலிகள் அங்கு வந்திருக்க வாய்ப்பே இல்லை என்பது தெரிந்தது. அதே போல ஒரு வயதான பெண் தாக்கப்பட்டதாக கூறப்பட்ட இடத்துக்கு சுமார் 1.5 கிமீ தள்ளி, வனத்தின் உள்ளே அவரது ரத்தத் துளிகளும் கிழிந்த ரத்தக்கறை படிந்த ஆடைகளும் கிடைத்துள்ளனர. இது பற்றி சந்தேகம் அடைந்து விசாரணை நடத்தும் போது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
பிலிபித் எல்லையில் உள்ள மக்கள், அவர்களாகவே தங்களின் வீடுகளில் உள்ள முதியோர்களை வனத்தினுள் கொண்டு போய் விட்டு விடுகின்றனராம். பிறகு சில நாட்கள் கழித்துச் சென்றால் புலிகளால் தாக்கப்பட்ட சடலங்கள் கிடைக்குமாம். அவற்றை ஊர் எல்லையில் போட்டுவிட்டு, புலிகள் கிராமத்துக்குள் புகுந்து முதியோர்களை அடித்துக் கொன்று விட்டதாக இழப்பீடு கோருவார்களாம்.
இதை அங்கே வசிக்கும் 60 வயதான முதியவர் ஜெர்னயில் சிங் என்பவரும் ஒத்துக் கொண்டுள்ளார். வனம் சரணாலயம் ஆக்கப்பட்டதால் வாழ்வாதாரத்தை இழந்து கிராம மக்கள் தவிப்பதாகவும், எனவே முதியவர்கள் தங்கள் உயிரைக் கொடுத்தாவது தங்களின் குடும்பத்துக்கு பண உதவி கிடைக்க இந்த திட்டத்துக்கு ஒப்புக் கொள்வதாகவும் தெரிவித்தார்.
இந்த கிராம மக்களுக்கு அரசு வேறு ஏதும் வாழ வகை செய்து முதியோரை காப்பாற்றுமா என மக்கள் ஏங்குகின்றனர்