மும்பை

ங்களுக்கு யாரும் இல்லாததால்  தற்கொலை செய்து கொள்ள அனுமதி கோரி ஜனாதிபதிக்கு ஒரு முதிய தம்பதியர் மனு அளித்துள்ளனர்.

மும்பையின் தெற்குப் பகுதியில் உள்ள சார்னி சாலையில் நாராயண் லவாடே (வயது 88) மற்றும் அவர் மனைவி ஐராவதி (வயது 78)  ஆகியோர் வசித்து வருகின்றனர்.  நாராயண் மகாராஷ்டிரா மாநில போக்குவரத்து துறையில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்.    ஐராவதி தனியார் பள்ளியில் முதல்வராக பணி புரிந்து ஓய்வு பெற்றார்.

இந்த தம்பதிகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் தேதி ஜனாதிபதிக்கு மனு ஒன்றை அனுப்பி இருக்கின்றனர்.  அந்த மனுவில், “நானும் எனது மனைவியிம்  தற்போது நல்ல உடல் நலத்துடன் இருக்கிறோம்.  எங்களுக்கு எந்த ஒரு கடுமையான வியாதியும் கிடையாது.    எங்களின் உடல்நிலை குலைந்து கடுமையான வியாதி வரும் வரை நாங்கள் வாழ விரும்பவில்லை.   அதை யாரும் கட்டாயப்படுத்துவதும் சரியானது இல்லை.

எங்கள் இருவருக்கும் குழந்தைகள் கிடையாது.   சகோதர சகோதரிகளும் ஏற்கனவே மரணம் அடைந்து விட்டனர்.    எங்களால் சமூகத்துக்கு எந்த ஒரு பயனும் இல்லை.  நாங்கள் எங்களுக்கே பயன் இன்றி வாழ்கிறோம்.   நாங்கள் வாழ்வது நாட்டின் வளத்தை பாழாக்கும் செயல் ஆகும்.   எங்களது உடலை மரணத்துக்கு பின் நன்கொடையாக அளிக்க எழுதி வைத்துள்ளோம்.   தவிர எங்களிடம் உள்ள பணத்தையும் கருவூலத்துக்கு அளிக்க முன் வந்துள்ளோம்.   எங்களுக்கு தற்கொலை செய்துக் கொள்ள அனுமதி வழங்க வேண்டும்”  என குறிப்பிட்டுள்ளனர்.

இந்த செய்தி பலரின் மனதை உருக்கி உள்ளது.