
மும்பை: மராட்டிய மாநிலத்தின் மூத்த பாரதீய ஜனதா தலைவர்களுள் ஒருவரான ஏக்நாத் கட்ஸே, அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். இது, அக்கட்சியின் அந்தஸ்தில் ஒரு சரிவாகப் பார்க்கப்படுகிறது.
அவர் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சேரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2014ம் ஆண்டு மராட்டியத்தில், தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் அமைந்த பாரதீய ஜனதா அரசில் அமைச்சராகப் பதவி வகித்து வந்த ஏக்நாத், 2016ம் ஆண்டு ஊழல் குற்றச்சாட்டு காரணமாக பதவி விலகினார்.
மராட்டிய மாநில பாரதீய ஜனதாவில் எந்தவித முக்கியத்துவத்தையும் பெறமுடியாமல் போன காரணத்தாலேயே, இவர் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. இந்தாண்டின் துவக்கத்தில் சட்ட மேலவை உறுப்பினராக தான் நியமிக்கப்படுவோமென எதிர்பார்த்தார்.
அது நடக்காமல் போகவே, பா.ஜ. புதிய தேசிய தலைவர் நட்டாவின் அணியில் இடம் கிடைக்குமென நினைத்தார். கடைசியில், அடுத்தமுறை மராட்டியத்தில் பா.ஜ. ஆட்சியமைத்தால் தனக்கு கேபினட் பொறுப்பு வழங்கப்படும் என்ற உத்தரவாதத்தை எதிர்பார்த்தார். ஆனால், இவை எதுவுமே நடக்கவில்லை என்று விவரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவருக்கு, மராட்டிய மாநில கட்சியின் கூட்டுக்குழு உறுப்பினர் என்ற அந்தஸ்து மட்டுமே அளிக்கப்பட்டது. இதனால், வேறுவழியின்றி கட்சியிலிருந்து விலகி, தேசியவாத காங்கிரஸில் இவர் இணைய முடிவெடுத்துள்ளார்.