கொச்சி:

கொச்சி மெட்ரோ ரயில் துவக்கப்பட்ட ஒரே வாரத்தில் அங்கு பணியாற்றிய எட்டு திருநங்கைகள் பணியிலிருந்து விலகியுள்ளனர்.

கொச்சியில் மெட்ரோ ரயில் திட்டத்தை, சமீபத்தில் பிரதமர் மோடி துவங்கிவைத்தார். இந்தியாவிலேயே அதிகபட்சமாக கொச்சி மெட்ரோ நிறுவனத்தில் 21 திருநங்கைகளுக்கு பணி வழங்கப்பட்டது.

ஆனால், மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கிய ஒரு வாரத்துக்குள், எட்டு திருநங்கைகள் தங்களது பணியை ராஜினாமா செய்துவிட்டனர். கொச்சி நகரில் தங்குவதற்கு வாடகைக்கு வீடு தர மறுப்பதால், பணியை ராஜினாமாசெய்துவிட்டு சொந்த ஊருக்குச் சென்றுவிட்டனர்.

மாவட்ட ஆட்சியர், கொச்சி மேயர் ஆகியோரிடம் தங்கள் பிரச்சினையை திருநங்கைகள் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை .

எடப்பள்ளி ரயில் நிலையத்தில் டிக்கெட் வழங்கும் பணியில் இருக்கும் முதுநிலை பட்டதாரியான ரகா ரன்ஜினி என்ற திருநங்கை,, ”இங்கே 15 ஆயிரம் சம்பளம் வாங்குகிறேன். வீடு கிடைக்காத நிலையில், லாட்ஜ் ஒன்றில் தங்கியுள்ளேன். லாட்ஜ் வாடகை நாள் ஒன்றுக்கு 600 ரூபாய் ஆகிறது. ஆக 18,000 ரூபாய். பிறகு எப்படி இங்கே வாழ முடியும்” என்று கேட்கிறார்.

திருநங்கைகளுக்கு வேலை அளிப்பதாக விளம்பரப்படுத்தினால் மட்டும் போதாது. அவர்களது வாழ்வாதாரத்துக்கு வழி ஏற்படுத்தித்தர வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.