பாரிஸ்: பாரிஸ் நகரின் சின்னமாகவும், சிறந்த சுற்றுலா தளமாகவும் விளங்கும் ஈஃபிள் கோபுரம், இம்மாதம் (ஜூன்) 25ம் தேதி மீண்டும் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஈஃபிள் கோபுரம் கடந்த மார்ச் 13ம் ‍தேதி மூடப்பட்டது.

தற்போது பிரான்ஸ் நாட்டில் ஊரடங்கு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. சுற்றுலா தளங்கள், நினைவுச் சின்னங்களும் மீண்டும் திறக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், உலகப் புகழ்பெற்ற ஈஃபிள் கோபுரம் ஜூன் 25ம் தேதி, நிபந்தனைகளுடன் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோபுரத்தின் முதல் தளத்தில் மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர். 11 வயதுக்கு மேற்பட்டவர்கள் முகக் கவசம் அணிவது கட்டாயம். படிக்கட்டு வழியே மட்டுமே ஏற வேண்டும். ஏறவும், இறங்கவும் தனித்தனி வழிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.