கெய்ரோ
சில நாட்களுக்கு முன்பு கப்பல் தரை தட்டிய சூயஸ் கால்வாயை விரிவு படுத்த எகிப்து அரசு திட்டமிட்டுள்ளது.
கப்பல் பயணத்தின் நேரத்தைக் குறைக்க உதவும் எகிப்தின் சூயஸ் கால்வாயில் ஆண்டு தோறும் 19 ஆயிரம் சரக்கு கப்பல்கள் சென்று வருகின்றன. இதன் மூலம் பயண நேரம் மட்டுமின்றி எரிபொருளும் அதிக அளவில் மிச்சப்படுத்தப் படுகின்றன. உலக அளவில் கப்பல் போக்குவரத்துக்கு சூயஸ் கால்வாய் அவசியமான ஒன்றாக உள்ளது.
சமீபத்தில் ஒரு சரக்கு கப்பல் குறுக்காக மாட்டிக் கொண்டு தரை தட்டியது. அதை மீட்கப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. கப்பல் சிக்கியதால் சூயஸ் கால்வாயில் போக்குவரத்து அடியோடு நின்று போனது. நீண்ட முயற்சிக்குப் பிறகு கப்பல் மீட்கப்பட்டு மீண்டும் சூயஸ் கால்வாயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது.
மீண்டும் இத்தகைய நிகழ்வைத் தடுக்க எகிப்து அரசு சூயஸ் கால்வாயை விரிவு படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த தகவலை ஒரு தொலைக்காட்சி நிகழ்வில் எகிப்து அதிபர் அப்துல் பதா மற்றும் சூயஸ் கால்வாய் ஆணையத் தலைவர் ஒஸாமா ராபி ஆகியோர் தெரிவித்துள்ளனர். இந்த கால்வாயின் தெற்கு பகுதியில் சீனாய் தீபகற்ப ஓரத்தில் 66 அடி ஆழத்தை 72 அடியாக அதிகரிக்கப்பட உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.