சென்னை: சென்னை எழும்பூர் வேனல்ஸ் சாலையின் ஈ.வெ.ரா மணியம்மையார் சாலை என பெயர் மாற்றம் செய்து தமிழகஅரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றது முதல், சில சாலைகளின் பெயர்களை மாற்றி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது எழும்பூர் வேனல்ஸ் சாலையின் பெயரை அன்னை ஈ.வெ.ரா மணியம்மையார் சாலை என மாற்றி உள்ளது.
இதுதொடர்பாக தமிழகஅரசு வெளியிட்டுள்ள அரசாணையில், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன செயலாளர் கி.வீரமணி அவர்களிடம் இருந்து பெறப்பட்ட கடிதத்தில், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களை 95 ஆண்டு காலம் பாதுகாத்து, அவரது இயக்கமாம் திராவிடர் இயக்கத்தை, மேலும் ஐந்தாண்டு காலம் காத்தவரும், ஏராளமான ஆதரவற்ற குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லம் அமைத்தும் மேலும், 60 ஆண்டுகளாக திருச்சியில் கல்வி நிறுவனங்களையும் நடத்தி வந்தவருமான அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் அவர்களது நூற்றாண்டை அரசு சார்பில் நடத்திடும் வாய்ப்பை இதற்குமுன் பெற முடியாத சூழல் இருந்தது.
எனவே, பெரியார் ஈ.வெ.ரா. சாலை அருகில் உள்ள வேனல்ஸ் சாலையில் அமைந்துள்ள அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் அவர்களின் முழு உருவச் சிலை தமிழ்நாடு அரசின் உரிய அனுமதியோடு மேனாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களால் 01.10.1994 அன்று திறந்து வைக்கப்பட்டது. அச்சிலை அமைந்துள்ள எழும்பூர் ரயில் நிலையத்திற்குப் பின்பகுதியிலிருந்து செல்லும் வேனல்ஸ் சாலையின் பெயரை அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் சாலை என்று பெயர் மாற்றம் செய்வது, அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையாரை பெருமைப்படுத்தியதாகவும், மகளிர் மாண்பினை உயர்த்தியதாகவும் இருக்கும் .
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.