போபால்:

மத்திய பிரதேசம் மாநிலம் மண்ட்சூர் மாவட்டத்தில் விவசாயிகள் போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

இதை கண்டிக்கும் விதமாக மத்திய பிரேதச மாநிலம் விருந்தினர் மாளிகையில் இருந்து ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள புறப்பட்ட மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் மீது முட்டை வீசப்பட்டது. மேலும், அவருக்கு எதிராக கறுப்பு கொடி காடப்பட்டது. முட்டை அமைச்சர் மீது விழவில்லை. அவரது வாகனத்தின் முன் பகுதியில் விழுந்தது.

இச்செயலில் ஈடுபட்டதாக இளைஞர் காங்கிரஸ் செயல்வீரர்கள் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து மாவட்ட காங்கிரஸ் தலைவர் சத்யபிரதா போய் கூறுகையில், ‘‘பாஜ ஆளும் மத்திய பிரதேச மாநிலத்தில் 5 விவசாயிகள் கொல்லப்பட்ட பிறகு வேளாண் அமைச்சர் பதவியில் நீடிக்க ராதா மோகன் சிங்குக்கு உரிமை இல்லை’’ என்றார்.

இச்செயலுக்கு பாஜ கடும் கண்டம் தெரிவித்துள்ளது. ஒடிசா பாஜ தலைவர் (பொறுப்பு) அருண் சிங் கூறுகையில்,‘‘ நாடு முழுவதும் காங்கிரஸ் நம்பகத்தன்மையை இழந்து வருகிறது. மத்திய அமைச்சர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது மாநில அரசின் கடமை’’ என்று தெரிவித்துள்ளார்.

மூத்த காங்கிரஸ் தலைவர் பிரதீப் மஜ்ஹி கூறுகையில்,‘‘இவ்வாறு எதிர்ப்பு தெரிவித்ததில் எவ்வித தவறும் இல்லை. மக்களின் உணர்வுகளை மத்திய அரசு உணர வேண்டும்’’ என்றார். ‘‘முட்டை வீசுவது பிரச்னைக்கு தீர்வை தந்துவிடாது’’ என்று பாஜ துணைத் தலைவர் தாமோதர் ராத் தெரிவித்துள்ளார்.