புதுடெல்லி:
மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கும் என்பதால், கொரோனா பாதிப்புக்காக நடப்பாண்டு நீட் மற்றும் ஜே.இ.இ ஆகிய தேர்வுக்கு தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கு நீட் நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தேசிய தேர்வுகள் முகமை என்ற அமைப்பு தனியாக உருவாக்கப்பட்டு இந்த ஆண்டு முதல் நீட் தேர்வுகளை நடத்துகிறது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே 3ம் தேதி நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா நோய் தொற்று காரணத்தினால் தள்ளி வைக்கப்பட்ட நீட் தேர்வை வரும் செப்டம்பர் 13ம் தேதியும், அதேப்போல் ஜே.இ.இ தேர்வு செப்டம்பர் 1 முதல் 6ம் தேதி வரை நடத்தப்படும் என கடந்த மாதம் தேர்வு முகமை அமைப்பு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கேரளா உட்பட நாடு முழுவதிலும் உள்ள 11 மாணவர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 6ம் தேதி மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில்,”கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் நாடு முழுவதும் அதிகமாகி வரும் சூழலில் நீட் தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளது என்பது சரியான ஒன்று கிடையாது. மேலும் வைரஸ் தொற்று ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தினால் மாணவர்கள் அனைவரும் தேர்வில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். அதனால் வரும் செப்டம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகளை ரத்து செய்துவிட்டு, கொரோனா நோய் தொற்று முழுவதுமாக கட்டுக்குள் வந்த பிறகு தேர்வை நடத்த வேண்டும். மேலும் இதுகுறித்து கடந்த ஜூலை 3ம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையையும் ரத்து செய்ய நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
இதைத்தவிர நீட், ஜே.இ.இ தேர்வுகளுக்கென ஏற்கனவே ஒதுக்கப்பட்ட உத்தரவை நீக்கிவிட்டு மாவட்டத்திற்கு ஒன்று என கூடுதல் மையங்களை உருவாக்க ஆணை பிறப்பிக்க வேண்டும்’’ என குறிப்பிட்டிருந்தனர். இந்த வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில், ‘நீட் தேர்வை கண்டிப்பாக நடத்த வேண்டும். நாடு முழுவதும் தற்போது 3ம் கட்ட தளர்வு வழங்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் நீட் தேர்வை எழுத அச்சப்படத் தேவையில்லை. மேலும் ஒரே மாதிரியான கேள்வித்தாள் கொண்டது என்பதால் இந்த தேர்வை ஆன்லைனிலும் நடத்த இயலாது’ என கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த மனு உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி அருண்மிஸ்ரா, நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கிருஷ்ணா முராரி ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாணவர்கள் தரப்பு வாதத்தில்,”மாநிலங்களில் உள்ள கல்லூரிகள் மற்றும் தேர்வு நடத்தப்படும் அனைத்து இடங்களும் கொரோனா மையங்களாக மாற்றப்பட்டுள்ளன. ஒருவேளை தேர்வு நடத்தப்படும் பட்சத்தில் மாணவர்கள் அங்கு சென்றால் வைரஸ் தொற்று அச்சம் தான் வரும். அவர்களால் தேர்வில் கவனம் செலுத்த முடியாது என்பதால் நடப்பாண்டு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்’’ என வாதிடப்பட்டது. மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா வாதத்தில்,”மாணவர்கள் நீட் தேர்வை கொரோனா வைரஸ் தொற்றைக் காரணம் காட்டி அச்சப்படத் தேவையில்லை. ஏனெனில் அனைத்து தேர்வு மையங்களிலும் வெப்ப பரிசோதனை, சமூக இடைவெளி உட்பட அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளும் பின்பற்றப்படும். அதுதொடர்பான அனைத்து பணிகளையும் அரசு மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் ஆகியவை மேற்கொண்டு வருகிறது’’ என வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மாணவர்களின் மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தனர். நீதிபதிகள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
இந்த விவகாரத்தில் ஒரு வருடத்தை வீணாக்க மாணவர்களாகிய நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? இது உங்கள் வாழ்க்கை சம்பந்தப்பட்ட ஒன்றாகும். கொரோனாவை காரணம் காட்டி நமது வாழ்க்கையின் அனைத்து செயல்பாடுகளையும் மூடிவைக்க முடியுமா? இதுபோன்ற சூழலில் நீதிமன்றம் கூட தான் செயல்பட்டு வருகிறது. அதனை ஏன் என்று கேள்வியெழுப்ப முடியுமா? குறிப்பாக நேரடி விசாரணை நடத்த வேண்டும் என இங்கேயே பல வழக்குகள் தொடரப்படவில்லையா?
மேலும் இக்கட்டான சூழலை தேர்வு நடத்தும் அதிகாரிகளும் கண்காணித்து தான் வருகின்றனர். அதனால் எந்த ஒரு நிலையிலும் வாழ்க்கையின் ஓட்டத்தோடு நாம் பயணிக்க தயாராக இருக்க வேண்டும். தேர்வு நடைமுறைகளில் நீதிமன்றம் தலையீடு செய்வது என்பது மாணவர்களின் எதிர்காலத்தை கண்டிப்பாக பாதிக்கும் என்பதால், நடப்பாண்டு நீட் தேர்வை ரத்து செய்ய உத்தரவிட முடியாது. இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்து, மாணர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்தனர்.
அனைத்து இந்திய ஆயுஷ் முதுகலை நுழைவு தேர்வை ஒத்தி வைக்கக் கோரி, ஆயுர்வேதம், ஹோமியோபதி இளங்கலை மருத்துவப் படிப்பை முடித்த 17 மருத்துவர்கள் உச்சநீதிமன்றத்தில் நேற்று மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். அதில், “தற்போது நாட்டில் உள்ள பல்வேறு கொரோனா மருத்துவமனைகளில் முன்களப் பணியாளர்களாக பணி புரிந்து வருகிறோம். தேர்வு எழுதுவதற்காக நாங்கள் புறப்பட்டால், விதிமுறைகளின்படி 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும். நாட்டில் தற்போது கொரோனா அதிகரித்து வரும் நிலையில், மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்படும். இதனால், ஆகஸ்ட் 29ம் தேதி நடத்தப்பட உள்ள நுழைவுத் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.