வாஷிங்டன்
ஆதார் விவரங்கள் வெளியாவது குறித்து செய்தி அளித்த பத்திரிகை மீதான அரசின் நடவடிக்கைக்கு அமெரிக்க ஆர்வலர் எட்வர்ட் ஸ்னோடென் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ஒரு ஆங்கில பத்திரிகையில் ஆதார் குறித்து செய்திகள் வெளியாகியது. அதில் ரூ. 500 செலவில் ஆதார் தகவல்களைப் பெற முடிகிறது என செய்தி ஒன்றை வெளியிட்டது. இதை ஆதார் நிறுவனம் மறுத்தது. மேலும் ஆதார் நிறுவனம் இந்த செய்தி நிறுவனம் மீதும் செய்தியை வெளியிட்ட பத்திரிகையாளர் மீதும் வழக்கு பதிந்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த எட்வர்ட் ஸ்னோடென் என்னும் சமூக ஆர்வலர் ஒரு கணினி பொறியாளர். அமெரிக்காவின் சி ஐ ஏ நிறுவனத்தில் பணி புரிந்தவர். பல்வேறு உலக நிகழ்வுகள் குறித்து தனது டிவிட்டரில் பதிந்து வருபவர். இவரது பதிவுகள் உலகெங்கும் உள்ள மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.
எட்வர்ட் ஸ்னோடென் தனது டிவிட்டர் பக்கத்தில் பத்திரிகையாளர் மீதான நடவடிக்கை குறித்து ஒரு பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “ஆதார் விவரங்கள் வெளியாவது குறித்த செய்திகளை வெளிக் கொண்டு வந்த பத்திரிகையாளர்களுக்கு விருது அளிக்க வேண்டுமே தவிர விசாரணை நடத்தக் கூடாது. உண்மையாகவே அரசு நீதி பற்றி அக்கறை கொண்டிருந்தால் அரசின் கொள்கைகளை மறு பரிசீலனை செய்தே ஆக வேண்டும். இந்த கொள்கைகள் இந்தியாவில் 100 கோடி மக்களின் தனி உரிமையை அழிக்க உள்ளது. இதற்கு பொறுப்பானவர்களை கைது செய்ய வேண்டுமா? அப்படியானால் ஆதார் நிறுவனத்தினர் கைது செய்யப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.