சென்னை: “கல்வியை மாநிலப் பட்டியலில் மாற்ற வேண்டும்” என தென்மண்டல துணை வேந்தர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் இந்திய பல்கலைக்கழக கூட்டமைப்பின் தென் மண்டல துணை வேந்தர்களின் கருத்தரங்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை யில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் கருத்தரங்கில் கர்நாடகா, ஆந்திரா உள்பட 6 மாநிலங்களை சேர்ந்த 75 துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்று உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக உரையாற்றினார். அப்போது, தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் தரமான உயர்கல்வி வழங்குவதில் மற்ற மாநிலங்களுக்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்கிறது என கூறியதுடன், கல்வியை மாநில பட்டியலில் மாற்ற வேண்டும்என்று வலியுறுத்தினார்.
மத்தியஅரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி பிற்போக்குத்தனமான கருத்துக்களை கல்வியில் புகுத்தி வருவதாக குற்றம் சாட்டியதுடன், கல்வியை முழுமையாக மாநில பட்டியலுக்கு மாற்றுவது இதற்கு தீர்வு என்று சுட்டி காட்டியதுடன், மாநில கல்விக்கொள்கை அடிப்படையில் பல்கலைக்கழகங்கள் செயல்பட வேண்டும் என்பதே மக்களின் விருப்பம் என்று கூறினார்.
முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய பல்கலைக்கழகங்களின் தலைவரான ஆளுநர் ஆர்.என்.ரவி, நாட்டின் முன்னேற்றத்தில் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது என்றும், பிரதமர் மோடி பதவியேற்ற பின் பாகுபாடின்றி அனைவரும் முன்னேறி வருகிறோம் எனவும் கூறினார்.
இந்த மாநாடு 2 நாட்கள் நடைபெறுகிறது. இளைய தலைமுறையான தரமான, சமமான, உறுதியான கல்வியை வழங்க வேண்டும் என்ற மையக்கருத்தோடு நடை பெற்று வரும் இந்த கருத்தரங்கில், பசியின்மை, வறுமையின்மை, தூய்மையான குடிநீர், சுகாதாரம், சமத்துவம், பருவநிலை செயல்பாடு, நிலம்சார் வாழ்க்கை உள்ளிட்ட 17 தலைப்புகளின் கீழ் விவாதம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மத்திய அரசிடம் இருந்து பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் நிதி, பல்கலைக்கழகங்களின் கல்வித்தரம் மற்றும் அடுத்தகட்ட முன்னேற்றம் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.