டெல்லி: பள்ளிகளுக்கான மாற்று கல்வி நாட்காட்டியை கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல் பேரில் இந்த நாட்காட்டி வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா எதிரொலியாக மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் வீடுகளிலேயே இருக்கின்றனர்.
அந்த தருணத்தில் அவர்கள் போதிய பயிற்சியில் ஈடுபடும் வகையில் நாட்காட்டி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த நாட்காட்டியை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் டெல்லியில் வெளியிட்டார்.
இது தொடர்பான நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: இந்த காலண்டர் ஆசிரியர்களுக்கு பல்வேறு தொழில்நுட்பங்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்துவது குறித்த வழிகாட்டுதல்களை வழங்குகிறது. வீட்டில் இருக்கும்போது கற்றுக் கொள்ள பயன்படுத்தலாம்.
நம்மில் பலருக்கு மொபைலில் இணைய வசதி இல்லை அல்லது வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர், கூகிள் போன்ற பல்வேறு சமூக ஊடக கருவிகளைப் பயன்படுத்த முடியாமல் போகலாம். ஆகவே பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் இந்த நாட்காட்டி உதவும்.
நாட்காட்டியில் வகுப்புகள் வாரியாக என்ன என்ன செய்யப்பட வேண்டும் என்பது பற்றிய அட்டவணைகள் தரப்பட்டுள்ளன. இந்தி, ஆங்கிலம், உருது மற்றும் சமஸ்கிருதம் ஆகிய 4 மொழிகளில் இருக்கிறது என்று கூறினார்.