டில்லி

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு குறித்துச் சிறப்புப் புலனாய்வு விசாரணை கோரி பத்திரிகை ஆசிரியர் சங்கம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு மனு அளித்துள்ளது.

இஸ்ரேல் நாட்டு மென்பொருளான பெகாசஸ் மூலம் இந்திய அரசு அலைப்பேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்டதாகச் செய்திகள் வெளியாகின.  பெகாசஸ் மூலம் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்கள், அமைச்சர்கள் என பலரது உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியானதால் எதிர்க்கட்சிகள் இதை கடுமையாக எதிர்த்து வருகின்றன.

தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்காலத் தொடரில் இது குறித்து விவாதிக்க வேண்டும் எனத் தொடக்க நாள் முதல் எதிர்க்கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.   ஆனால் பாஜக அரசு அதைக் கண்டு கொள்ளாததால் தினசரி அமளிகள் ஏற்பட்டு நாடாளுமன்ற அவைகள் ஒத்தி வைக்கப்படுகின்றன.

இந்நிலையில் எடிடர்ஸ் கில்ட் எனப்படும் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு மனு அளித்துள்ளது.  அந்த மனுவில், “எதிர்க்கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோரின்  உரையாடல்களை ஒட்டுக் கேட்பது ப்த்திரிகை சுதந்திரம் மற்றும் தனி மனித உரிமையில் தலையிடுவதாகும்.   இதன் மூலம் பத்திரிகையாளர்கள் ஊழல், லஞ்சம் குறித்த ரகசியத் தகவல்களைப் பகிர வகையில்லாமல் போகிறது.

பத்திரிகையாளர்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய அரசே இவ்வாறு ஒட்டுக் கேட்பது இந்திய அரசியல் சட்டப்படி சரியானதா என விளக்க வேண்டும்.  மேலும் தனி மனித உரிமையை இது பாதிக்காதா என்பதையும் தெளிவு படுத்த வேண்டும்.,   அரசுக்கு இத்தகைய அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து உச்சநீதிமன்றம் சிறப்பு விசாரணைக் குழுவின் மூலம் விசாரிக்க வேண்டும்” எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதுவரை இந்து என் ராம், சசிகுமார் உள்ளிட்ட 3 பத்திரிகையாளர்கள் இது போல் மனு அளித்துள்ளனர்.  இண்டஹ் மனுக்கள் அனைத்தும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி அன்று தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு விசாரிக்க உள்ளது