சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, தமிழ்நாட்டில்,  அரசு ஊழியர்களின் காலி பணியிடங்கள் ஐந்தரை லட்சமாக உயரந்துள்ளது என கூறினார்.

மேலும், சிவகங்கையில் போலீசாரால் அடித்து கொல்லப்பட்ட  திருப்புவனம் அஜித் குமார் வீட்டிற்கு சென்ற குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அவரது தாய் மற்றும் சகோதரர் நவீன் குமாருக்கு ஆறுதல் கூறினார். மேலும் அவரது வீட்டில் இருந்த அஜித் குமாரின் புகைப்படத்துக்கு மாலை அணிவித்து பூக்களை தூவி மரியாதை செலுத்தினார். அதிமுக சார்பாக ரூ.5 லட்சம் நிதி உதவியினையும் செய்தார்.
இதைத்தொடர்ந்து, திருபுவனம் பகுதியில் உள்ள கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வரும் ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரசாரத்தின்  இரண்டாம் கட்டமாக பகுதியாக சிவகங்கை மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொள்ளும் வகையில் சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலம் நேற்று சென்றடைந்தார்.

நேற்று மாலை  காரைக்குடி, திருப்பத்தூர் மற்றும் சிவகங்கை பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்தார்.  இந்தச் சந்திப்பின் ஒரு பகுதியாக, சிவகங்கை அரண்மனை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் திமுக அரசை மிகக் கடுமையாக விமர்சித்தார். அப்போது,  சிவகங்கை மண்ணை வீர வரலாற்று மிக்க மண் என்று குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, “அம்மா அரசு இந்த இடத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் பல நினைவு மண்டபங்கள் மற்றும் விழாக்கள் நடத்தியது. ஆனால் தற்போதைய திமுக அரசு 5 ஆண்டு ஆட்சியில் மக்கள் நல திட்டங்களை வகுப்பதற்குப் பதிலாக, குடும்ப ஆட்சியையே முன்னிலைப்படுத்தியுள்ளது” என்று குற்றம்சாட்டினார்.

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்துவிட்டதாக எடப்பாடி பழனிசாமி சாடினார். “பள்ளி மாணவர்களுக்கும் பாதுகாப்பில்லை. போக்சோ சட்டத்தில் ஆசிரியர்கள் கைது செய்யப்படுவது சாதாரணமான ஒன்றாகி விட்டது. இவ்வாறு பொம்மை முதல்வர் ஆட்சி நடக்கிறது” என்று அவர் தெரிவித்தார்.

இதையடுத்து இன்று காலை மீண்டும் தனது சுற்றுப்பயணத்தை மேற்கொண்டவர், முதலில் மடப்புரம் அஜித் குமார் இல்லத்திற்கு சென்று ஜித்குமார் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இதனை தொடர்ந்து அஜித்குமார் தாய், சகோதருக்கு ஆறுதல் தெரிவித்து நிதி உதவியும் வழங்கினார்.

இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, அஜித்குமார் போலீசாரால் அடித்து கொல்லப்பட்டது கடும் கண்டனத்திற்கு உரியது.  மக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறையால் உயிர் பறிபோயுள்ளது, போலீசாருக்கு அழுத்தம் கொடுத்தது யார்? அ.தி.மு.க. போராடிய பின்னரே காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றவர்,  அஜித்குமார் மரணத்திற்கு அரசே முழு பொறுப்பேற்க வேண்டும். அஜித் குடும்பத்திற்கு அ.தி.மு.க. துணை நிற்கும் என்று உறுதி கூறியவர்,  தி.மு.க. ஆட்சி நடக்கும்போதெல்லாம் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விடுகிறது. கொலை, கொள்ளை, திருட்டு நடக்காத நாளே இல்லை. * கொலை நிலவரம் என்ன என செய்தி வெளியிடும் அளவிற்கு தமிழகத்தில் நிலை உள்ளது என்று கடுமையாக விமர்சித்தார்.

பின்னர்,  சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி கிராமத்தில் கீழடி அருங்காட்சியகம்  சென்றவர், அங்கு அருங்காட்சியகத்தை பார்வையிட்டார்.  அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முதன் முறையாக கீழடி அருங்காட்சியகத்தை நேரில் பார்வையிட்டு உள்ளார்.  அவருடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, விஜயபாஸ்கர், கோகுல இந்திரா உள்ளிட்டோர் வந்துள்ளனர்.

கீழடி அருங்காட்சியம் வருகை தந்த  எடப்பாடி பழனிச்சாமிக்கு கீழடி அருங்காட்சியகம் பொறுப்பாளர்கள் கீழடியின் வரலாற்று புத்தகத்தை பரிசாக கொடுத்து வரவேற்றனர். கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்ட எடப்பாடி பழனிச்சாமிக்கு தொல்லியல் ஆய்வாளர்கள் அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ள வரலாற்று தகவல்களை கூறினர்.

இதனை தொடர்ந்து  கீழடியில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி,  “கீழடியில் கிடைத்த அரிய பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது, அதனை பார்வையிட்டேன். 2014 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் கீழடியில் அகழாய்வு தொடங்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு நடத்தப்பட்டு வருகிறது.

அதிமுக ஆட்சி காலத்தில் கீழடி அருங்காட்சியம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. கீழடி அகழாய்வு தமிழர்களின் பழமையான நாகரீகத்தை வெளிக்கொண்டு வந்துள்ளது. கீழடியில் அருங்காட்சியம் கட்டும் பணிகளை அதிமுக தொடங்கியது. கீழடியில் நகர நாகரிகம் கி.மு. 6 ஆம் நூற்றாண்டு உடையது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

தமிழர்களின் நாகரிகத்தில் பறைசாற்றுவதற்கு கீழடி அகழ்வாராய்ச்சி உதவியாக இருந்துள்ளது. கீழடி அகழ்வாய்வுக்கு கீழடி என் தாய்மடி என பெயர் சூட்டியது அதிமுக ஆட்சியில் தான் கீழடியை வைத்து சிலர் அரசியல் செய்து வருகிறார்கள் என்று விமர்சித்தார்.

தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் மாணவ மாணவிகளுக்கு தரமான கல்வி கிடைப்பதில்லை. நிறைய அரசு கல்லூரிகளில் முதல்வர்கள் பேராசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற போது மூன்று லட்சம் அரசு ஊழியர்கள் காலி பணியிடங்கள் இருந்தது. தற்போது அரசு ஊழியர்களின் காலி பணியிடங்கள் ஐந்தரை லட்சமாக உயர்ந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

கீழடி  அருங்காட்சியம் அமைக்க, கடந்த  2020 ஜூலை மாதம் 20 ஆம் தேதி அதிமுக ஆட்சி காலத்தில்  எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார்.  இதனை 2023 மார்ச் 5 ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.  அதன்படி,  2 ஏக்கர் நிலத்தில் 31,000 சதுர அடி பரப்பளவில் 18 கோடியே 43 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் கீழடி அருங்காட்சியகம் கட்டப்பட்டது.

‘வைகையும் கீழடியும், நிலமும் நீரும், கலம் செய் கோ, ஆடையும் அணிகலன்களும், கடல் வழி வணிகம், வாழ்வும் வளமும்’, என்ற 6 தலைப்புகளின் கீழ் அருங்காட்சியகத்தில் பொருட்களை காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது.

கீழடியில் 2015 முதல் 2017 வரை 3 கட்டங்களாக மத்திய தொல்லியல் துறையும், 2018 முதல் தற்போது வரை 7 கூட்டங்களாக மாநில தொல்லியல் துறையும் அகழாய்வு நடத்தப்படுகின்றது. கீழடியில் மத்திய – மாநில தொல்லியல் துறை சார்பில் 10 கட்டங்களாக அகழ்வாய்வுகள் நடத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

விவசாயிகள் கடன்பெற தடையாக உள்ள  சிபில் ஸ்கோர் பிரச்சனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது! எடப்பாடி தகவல்…