கரூர்:

கடந்த 2 ஆண்டுகள் மோடி தயவில் ஆட்சி நடத்திவிட்டார் எடப்பாடி பழனிசாமி என டிடிவி. தினகரன் கூறியுள்ளார்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அவர் பேசியதாவது:-

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலாவின் ஆதரவோடு பன்னீர்செல்வத்தை முதல்-அமைச்சராக்கினோம். ஆனால் அவர் பா.ஜ.க.வின் ஏஜெண்டாக செயல்பட்டதால், பின்னர் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கினோம்.

இப்போது இங்கு போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர், அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நமது சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்து கொண்டுபோய் தி.மு.க. தலைமையில் ஆட்சி அமைக்க முயற்சிக்கிறார்.

எனவே கட்சி மீது கொள்கை பிடிப்புள்ளவரை தேர்வு செய்தால் தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும்.

கடந்த 2 ஆண்டுகள் மோடி தயவில் ஆட்சி நடத்திவிட்டார் எடப்பாடி பழனிசாமி. ஜெயலலிதாவின் பெயரை சொல்லி தற்போது ஆட்சி நடத்தி கொண்டிருப்பவர்கள், அவர் முன்பு எந்த திட்டங்களையெல்லாம் வேண்டாம் என்று ஒதுக்கினாரோ அதையெல்லாம் தற்போது செயல்படுத்துகின்றனர்.

இதனால் தமிழக உரிமை பறிபோவதோடு மோடியின் எடுபிடிகளாக பழனிசாமியும், பன்னீர் செல்வமும் இருக்கின்றனர் என்றார்.