சென்னை: ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிறதாம். எங்கள் மீது நீங்கள் கரிசனை காட்ட வேண்டாம் என அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் கூறியதற்கு எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில்இன்று பட்ஜெட் மீதான விவாதத்திற்கு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்தார். அப்போது, அ.தி.மு.க. தொண்டர்களின் எதிர்காலத்தை வேறு யாரோ தீர்மானித்து கொண்டிருக்கின்றனர். கவனமாக இருங்கள். வேறு யாரோ ஒருவரின் கணக்குகளை அ.தி.மு.க.வினர் புரிந்து கொள்ள வேண்டும். *அ.தி.மு.க.வை பறித்துக்கொள்ள நினைப்பவர்களிடமிருந்து நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றார்.
இதற்கு பதில் அளிக்க முன்னாள் அமைச்சர் தங்கமணி எழுந்த நிலையில், அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்து விட்டார்.
இதுதொடர்பாக செய்தியளார்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அதிக கடன் வாங்கியது தான் தி.மு.க. அரசின் சாதனை என்று தெரிவித்தவர், திமுக அரசு எந்த புதிய திட்டத்தையும் தொடங்காமல் புள்ளி விபரங்களை மட்டுமே சொல்லி சமாளித்து வருவதாக குற்றம் சாட்டினார்.
பட்ஜெட் கணக்கை சரியாக செய்யுங்கள் என அமைச்சரை விமர்சித்த எடப்பாடி பழனிச்சாமி, எங்களது கணக்கை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிறாம். எங்கள் மீது நீங்கள் கரிசனை காட்ட வேண்டாம், அ.தி.மு.க-வை பொறுத்தவரை கொள்கை வேறு, கூட்டணி வேறு. அ.தி.மு.க. தன்மானத்தை இழக்காது என கூறினார்.
மேலும், தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின் 4 ஆண்டுகளில் 4 லட்சத்து 52 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளது. இது 5 ஆண்டு தி.மு.க. ஆட்சி நிறைவில் 5 லட்சம் கோடி ரூபாய் கடன் இருக்கும். கடனை குறைத்து வருவாய் அதிகரிக்கப்படும் என தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது. ஆனால் அது வெத்து வேட்டாகவே உள்ளது. கடனை வாங்கி குவித்துள்ள தமிழ்நாடு அரசு அதை மறைக்கும் வகையில், சதவீத அடிப்படையில் கூறி நிதி அமைச்சர் சமாளித்து கொண்டிருக்கிறார். *
தி.மு.க. ஆட்சி அமைத்த நிதி மேலாண்மை குழு 4 ஆண்டுகளில் என்ன அறிக்கை சமர்பித்துள்ளது என கேள்வி எழுப்பியவர், நிதி மேலாண்மை குழு அமைத்த பின்னர் தான் 4.5 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டுள்ளது. மாநில அரசின் வரி வருவாய் 1 லட்சத்து ஓராயிரம் கோடி ரூபாய் கூடுதலாக கிடைத்துள்ளது. மத்திய அரசின் வரி பகிர்வில் 33 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாக கிடைத்துள்ளது. மூலதன செலவு வெறும் 57 ஆயிரம் கோடி ரூபாய் என்று தான் கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால், நாங்கள் அரசின் கடன் தொடர்பான வெள்ளை அறிக்கை கேட்டோம், ஆனால், அதை வெளியிட திமுக அரசு மறுத்து வருகிறது என்றார்.