டெல்லி: தமிழ்நாடு மெர்க்கன்டைல வங்கியின் பங்குகளை விதிகளை மீறி முறைகேடாக வாங்கிய விவகாரத்தில், ஸ்டாண்டர்டு சாட்டர்டு வங்கிக்கு, அமலாக்கத்துறை ரூ.100 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டு உள்ளது.
வெளிநாட்டு வங்கியான ஸ்டாண்டர்டு சாட்டர்டு வங்கி, தனது 7 வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மூலம், தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் 46,868 பங்குகளை கடந்த 2007, 2011, 2012ஆம் ஆண்டு களில் வாங்கி குவித்தது. இந்த விவகாரத்தில் முறைகேடு நடந்துள்ளதாகவும் இது குறித்து விசாரணை நடத்தும்படியும் புகார்கள் எழுந்தன. இதுகுறித்து, விசாரணை நடத்தும், இந்திய ரிசர்வ் வங்கி அமலாக்கத்துறைக்கு கடிதம் எழுதியது.
இதையடுத்து, இந்த முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை ஃபெமா சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தியது. சுமார் 13 ஆண்டுகால விசாரணைக்கு பிறகு, முறைகேடு நடைபெற்றுள்ளது உறுதியான நிலையில், ஸ்டாண்டர்டு சாட்டர்டு வங்கி, தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி மற்றும், மெர்க்கன்டைல் வங்கியின் தலைவர் எம்.ஜி.எம் மாறன் ஆகியோருக்கு அபராதம் விதித்து உத்தர விட்டு உள்ளது.
அதன்படி, அந்நிய முதலீட்டு விதிகளை மீறி வாங்கி குவித்தது தொடர்பாக ஸ்டாண்டர்டு சாட்டர்டு வங்கிக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கிக்கு 17 கோடி ரூபாய் அபராததும், அந்த வங்கியின் முன்னாள் தலைவரும், மேலாண் இயக்குநருமான எம்ஜிஎம்.மாறனுக்கு 35 கோடி ரூபாயும் அபராதம் விதித்து அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.