பெங்களூரு
வெளிநாட்டுப் பண விவகாரத்தில் சட்ட மீறல் நடந்ததாக மனித உரிமை நிறுவனமான அம்னெஸ்டி இண்டர்நேஷனலுக்கு அமலாக்கத்துறை நோட்டிஸ் அனுப்பி உள்ளது.
மனித உரிமை இயக்க நிறுவனமான அம்னெஸ்டி இண்டர்நேஷனல் இந்தியா என்னும் நிறுவனம் பெங்களூருவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் கடந்த 1966 முதல் இயங்கி வரும் ஒரு தன்னார்வ சேவை நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் தாய் நிறுவனம் இங்கிலாந்தில் உள்ள அம்னெஸ்டி இண்டர்நேஷனல் யு கே என்னும் நிறுவனம் ஆகும்.
இந்த நிறுவனம் குறித்து வெளிநாட்டுப் பணப் பரிவர்த்தனைத் துறைக்கு புகார்கள் வந்தன. அந்த புகார்களின் அடிப்படையில் கடந்த வருடம் அம்னெஸ்டி நிறுவன அலுவலகங்களில் சோதனைகள் நடந்தன. அந்த சோதனையில் வெளிநாட்டில் இருந்து பணம் பெற்ற விவகாரத்தில் சட்ட விரோதமாக ரூ.51.72 கோடி பணப் பரிமாற்றம் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
அம்னெஸ்டி நிறுவனத்துக்கு வெளிநாட்டுப் பண பர்விரத்தனைத் துறை இது குறித்து விளக்கம் கேட்டு இருந்தது. அதற்கு நிறுவனம் சரியான விளக்கம் அளிக்காததால் இது குறித்து அமலாக்கத்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அமலாக்கப் பிரிவு தற்போது இந்த நிறுவனத்துக்கு நோட்டிஸ் அனுப்பி உள்ளதாக அதிகாரிகள் நேற்று தெரிவித்துள்ளனர்.