டெல்லி: ராஞ்சி உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியதை தொடர்ந்து மாநில முதல்வராக மீண்டும் பதவி ஏற்றுள்ள ஹேமந்த் சோரன் ஜாமினை ரத்து செய்ய வலியுறுத்தி அமலாக்கத்துறை உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. ஹேமந்த் சோரனுக்கு வழங்கிய ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.
நில மோசடி குற்றச்சாட்டில் ஜனவரி 31ம் தேதி கைது கைது செய்யப்பட்ட ஜார்கண்ட மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் சில மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய முதல்வராக சம்பை சோரன் பதவி ஏற்றார். இதற்கிடையில், அவர் ஜாமின் கோரி ராஞ்சி உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல செய்திருந்தார்.
மனுவை விசாரித்த ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம், ஹேமந்த் சோன் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் 45 பிரிவின்படி எந்த குற்றத்தையும் செய்யவில்லை என கூறி ஜாமின் அளித்தது.
இதனால் சிறையில் இருந்து வெளியே வந்த ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராக பதவி ஏற்றார். இந்த நிலையில், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின் அளித்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமலாக்க துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
ஹேமந்த் சோரனுக்கு ஜாமின் வழங்கும் முன் அனைத்து அம்சங்களையும் உயர்நீதிமன்றம் ஆராயவில்லை என்று அமலாக்கத்துறை அதன் மனுவில் புகார் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே ஹேமந்த் சோரனுக்கு வழங்கிய ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.