டில்லி

அமலாக்கத்துறை காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் ரூ.751 கோடி சொத்துக்களை முடக்கி உள்ளது.

 

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் சுதந்திரத்துக்கு முன்னதாக நிறுவப்பட்ட பத்திரிகை ‘நேஷனல் ஹெரால்டு’ ஆகும்.  காங்கிரஸ் கட்சி இந்த பத்திரிகையை மேம்படுத்தக் காங்கிரஸ் கட்சி ரூ.90 கோடி வட்டியில்லாக் கடன் வழங்கியது. கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில், பதிப்பு நிறுவனமான ‘அசோசியேட்டட் ஜர்னல்ஸ்’ நிறுவனத்தை, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியையும், அவரது மகன் ராகுல் காந்தியையும் இயக்குநர்களாகக் கொண்ட ‘யங் இந்தியா’ நிறுவனம் கையகப்படுத்தியது.

எனவே ‘அசோசியேட்டட் ஜர்னல்ஸ்’ நிறுவனத்தின் ரூ.2 ஆயிரம் கோடி சொத்துக்களை ‘யங் இந்தியா’ அபகரித்து விட்டதாக பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி வழக்குத் தொடுத்து அது டில்லி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அமலாக்கத்துறை இந்த விவகாரத்தில் நடைபெற்றதாகக் கூறப்படுகிற சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளது. தற்போது ‘யங் இந்தியா’ நிறுவனத்துக்கு எதிரான சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பான வழக்கில் ரூ.751.9 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கியுள்ளதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது.

அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

”அசோசியேட்டட் ஜர்னல்ஸ்’ நிறுவனத்துக்குச் சொந்தமாக டில்லி, மும்பை, லக்னோ உள்படப் பல நகரங்களில் இருக்கும் ரூ.661.69 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளும், ‘அசோசியேட்டட் ஜர்னல்ஸ்’ நிறுவனத்தின் ஈக்விட்டி பங்குகளில் முதலீடு செய்ததன் மூலம் கிடைத்த ரூ.90.21 கோடி வருவாயும் ‘யங் இந்தியா’ வசம் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து ரூ.751.9 கோடி மதிப்பிலான அந்த சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன” 

என தெரிவிக்கப்பட்டுள்ளது.