டில்லி

வீடியோகான் நிறுவனத்துக்கு கடன் வழங்க ஐசிசிஐ வங்கிஅதிகாரிக்கு லஞ்சம் கொடுக்கப் பட்டது தொடர்பாக, ஐசிசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் சந்தா கோச்சார், மற்றும் வீடியோகான் அதிபர் வேணுகோபால் தூத் வீடுகளில் மத்திய அமலாக்கத்துறை இன்று அதிரடியாக ரெய்டு நடத்தி வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் சந்தா கோச்சாருக்கு எதிராக சிபிஐ லுக்அவுட் நோட்டீஸ் வெளியிட்ட நிலையில், இன்று அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

ஐசிஐசிஐ வங்கியின் தலைவராக சந்தா கோச்சர் பணிபுரிந்த போது, வீடியோகான் நிறுவனத் துக்கு ரூ. 3250 கோடி மதிப்புள்ள கடன் வழங்கப்பட்டது. இந்த கடன் தொகை 2009ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டுகளுக்கு இடையே பல தவணையாக கொடுக்கப்பட்டுள்ளது. கடனை வாங்கிய வீடியோக்கான் நிறுவனம், அதை திருப்பி செலுத்த வில்லை. இதுகுறித்து வங்கி தலைமை அளித்த புகாரின்பேரில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

விசாரணையின்போது, ஐசிசிஐ வங்கி வீடியோகான் நிறுவனத்துக்கு கடன் வழங்கிய வகையில், ஐசிசிஐ வங்கியின் அப்போதைய தலைவர் சந்தா கோச்சார் கணவர் தீபக் கோச்சாருக்கு வீடியோக்கான் அதிபர் வேணுகோபால் தூத்  ரூ.64 கோடி மதிப்பிலான நிறுவனம் ஒன்றை லஞ்சமாக வழங்கப்பட்டது தெரியவந்தது.

இதுதொடர்பான விசாரணையை அடுத்து, சந்தா கோச்சார் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் மற்றும் அவரது கணவர் வீடியோகான் அதிபர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்கள் வெளிநாடு தப்பிவிடாதபடி லுக்அவுட் நோட்டீசும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அமலாக்கத்துறை சந்தா கோச்சார், வேணுகோபால் தூத் வீடுகளிலும், அவர்களுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்தி வருகிறது.