மும்பை: 175 கோடி ரூபாய் ஹவாலா பண மோசடி வழக்கில் சிவசேனா கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.வின் உதவியாளர் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளார். இது மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிவசேனா கட்சியைச் சேர்ந்தவர் பிரதாப் சர்நாயக். இவர் தானேவின் ஓவலா-மஜிவாடா தொகுதி எம்எல்ஏவாக இருந்து வருகிறார். இவரது உதவியாளர் அமித் சந்தோல். இவர்கள்மீது சட்டவிரோத நிதி கையாடல் தொடர்பான புகாரின் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அவரது உதவியாளர் சந்தோல் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.
முன்னதாக செவ்வாய்க்கிழமை அன்று (24ந்தேதி) சர்நாயக்கின் வளாகத்தில் நடந்த சோதனையின்போது வெளிநாட்டு வங்கியிடமிருந்து பெற்ற டெபிட் கார்டை அமலாக்கத்துறை பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. ஃப்ரீமாண்ட் வங்கி சர்நாயக்கிற்கு வழங்கிய அட்டை கலிபோர்னியாவைச் சேர்ந்த ஃபர்ஹாத் தாத்ராஸின் முகவரியில் உள்ளது. மேலும், அவர் ஹவாலா பரிவர்த்தனைகள் மற்றும் சர்நாயக் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறப்படும் ஆஃப்-ஷோர் நிறுவனங்கள் தொடர்பான ஆவணங்கள் ஆகியவற்றைக் குறிக்கும் புத்தக ஆவணங்களையும் அமலாக்கத்துறை கண்டறிந்துள்ளது.
இந்நிலையில் சரநாயக்கின் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மூலம் சர்நாயக் தொடர்புடைய அனைத்து தகவல்களையும் பெறமுடியும் எனக்கருதி அமலாக்கத்துறை இந்தஅதிரடிநடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
சந்தோல் கைது மூலம் டாப்ஸ் குரூப்பின் புரமோட்டரான பிரதாப் சர்நாயக்கிற்கும் ராகுல் நந்தாவிற்கும் இடையிலான நிதி பரிவர்த்தனைகள் குறித்த தகவல்களை அவர் நிறுவனத்திற்கு கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும், நந்தா அரசு நிறுவனமான எம்.எம்.ஆர்.டி.ஏவுக்கு பாதுகாப்புக் காவலர்களை குறைந்த எண்ணிக்கையில் அனுப்பி, போலியாக கனக்குக் காட்டி அதிக கட்டணம் வசூலிப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.