டெல்லி: பணமோசடி வழக்கில் என்எஸ்இ (national stock exchange) முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ரவி நரேன் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப் பட்டார்
தேசிய பங்குச்சந்தை மோசடி தொடர்பாக, ஏற்கனவே, அந்நிறுவன தலைவராக இருந்த, சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் அவரது நண்பர் ஆனந்த் சுப்பிரமணியம் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2013-2016 -ம் ஆண்டு வரை தேசிய பங்குச்சந்தையின் நிர்வாக இயக்குனராக இருந்த சித்ரா ராமகிருஷ்ணா மீது அண்மையில் செபி பல்வேறு முறைகேடுகளை முன்வைத்தது. பங்குசந்தை ரகசியங்களை சித்ரா ராமகிருஷ்ணா இமயமலை சாமியாருடன் பகிர்ந்து கொண்டார் என்றும் புகார் கூறப்பட்டது.
கைது செய்யப்பட்டுள்ள சித்ரா மற்றும் ஆனந்துக்கு தலா ரூ. 5 கோடி அபராதம் விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், முன்னாள் தலைமை செயல் அதிகாரி ரவி நரைனை பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
பங்குச்சந்தை அதிகாரிகளின் தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக்கேட்டதாக சித்ரா ராமகிருஷ்ணா, மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் சஞ்சய் பாண்டே, மற்றும் ரவி நரைன் மீது அமலாக்கத்துறை புதிதாக வழக்கு பதிவு செய்தது. இது தொடர்பாக சித்ரா ராமகிருஷ்ணாவை ஏற்கனவே அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அதைத்தொடர்ந்து, முன்னாள் தலைமை செயல் அதிகாரி ரவி நரைனிடமும் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் நேற்று அவரை அமலாக்கத்துறை அதிரடியாக கைது செய்துள்ளது.
கடந்த 1994 முதல் 2013-ம் ஆண்டு வரை தேசிய சந்தையின் தலைமை செயல் அதிகாரியாக ரவி நரைன் செயல்பட்டுவந்தார். அதன் பின்னர் தேசிய பங்குச் சந்தையின் நிர்வாக குழுவின் துணை தலைவராக செயல்பட்ட அவர் 2017-ம் ஆண்டு ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.