லண்டன்:

இங்கிலாந்து இளவரசர் ஹாரி-மேகன் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், டயானா தம்பதியரின் இளைய மகன் இளவரசர் ஹாரி (வயது 35). இவர் தனது காதலி மேகனை (38) கடந்த ஆண்டு மே மாதம் 19-ந் தேதி மணந்தார்.

இந்நிலையில், தன் மனைவி மேகன் திங்களன்று காலை அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்ததாக இங்கிலாந்து இளவரசர் ஹாரி தெரிவித்துள்ளார்.

தனக்கு மகன் பிறந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு இளவரசர் ஹாரி கூறும்போது, மேகன் ஆண் குழந்தையை பெற்றெடுத்தது எனக்கு அளவிடமுடியாத பெருமையை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை 7 பவுன்ஸ், 3 அவுன்ஸ் எடையுடன் உள்ளது.
என் குழந்தையைப் பற்றி நினைக்கும் போது, நிலவில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது என்றார்.

குழந்தை பிறப்பதற்கு முன் என்ன குழந்தை என அறிந்து கொள்ள விரும்பவில்லை என்று கூறிய ஹாரி,மேகன் தம்பதிகள், இது தங்களுக்கு மெய்சிலிர்க்கும் அனுபவமாக உள்ளது என்றனர்.

ஹாரியின் குழந்தை பிரிட்டிஷ் வம்சத்தின் 7-வது ஆண் வாரிசாகும். இரண்டாவது ராணி எலிசபெத்தின் 8-வது கொள்ளுப் பேரனாகும்.

மேகனும் ஹாரியும் முறைப்படி விண்ணப்பித்தால், குழந்தைக்கு பிரிட்டிஷ்-அமெரிக்க இரட்டை குடியுரிமை கிடைக்கும்.

மேகன் அமெரிக்கர். இளவரசர் ஹாரியை விட வயதில் மூத்தவர். ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனக்கு குழந்தை பிறந்த விசயத்தை தன் தாயாரின் குடும்பத்தினருக்கு சொல்லி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டிருக்கிறார் ஹாரி.

இந்நிலையில், தன்னுடைய பிரியத்துக்குரிய தோழியான இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவை தனது குழந்தைக்கு ஞானத் தாயாகவும், நிக் ஜோனாஸ்சை ஞானத் தந்தையாகவும் அமர்த்திக்கொள்ள மேகன் பரிசீலிப்பதாக, அவரது செய்தி தொடர்பாளர் ஆண்ட்ரூ போல்கே சமீபத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.