டெல்லி : கொரோனா தடுப்பூசி காரணமாக V வடிவத்தில் பொருளாதாரம் வளர்ச்சியடையும் என்று பொருளாதார ஆய்வறிக்கை கணித்துள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2020-21ம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்துள்ளார். அந்த ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:
மார்ச் மாதத்தோடு முடிவடையும் நடப்பு நிதியாண்டில் பொருளாதாரமானது 7.7 சதவீதமாக சரியக் கூடும். பொருளாதார சரிவுக்கு கொரோனா பேரிடரும், அதனால் பிறப்பிக்கப்பட்ட பல்வேறு கட்ட ஊரடங்கும் காரணமாகும்.
ஆனாலும், கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறையும் பட்சத்தில் 2021-22ம் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 11.5 சதவீதமாக இருக்கும். நடப்பாண்டுக்கான நிதி பற்றாக்குறை 6.2 சதவீதத்திலிருந்து 7 சதவீதம் வரை இருக்கலாம்.
கொரோனாவுக்கு எதிராகத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால், நாட்டின் பொருளாதாரம் எந்த வேகத்தில் சரிந்ததோ, அதே வேகத்தில் உயரும். அதாவது, பொருளதார குறியீட்டின்படி ‘V’ வடிவ மீட்சியில் இந்தியப் பொருளாதாரம் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது என்று அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.