பிரஸ்ஸல்ஸ்: பெல்ஜியத்தில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அமெரிக்க அதிபர் பைடன் ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்ததுடன், நேட்டோ தக்க பதிலடி கொடுக்கும் என்றும், ரஷ்யாவுக்கு உதவும் சீனாவுக்கு பொருளாதார தடை விதிக்கப்படும் என்றும் எச்சரித்தார்.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், நேட்டோ அமைப்பின் அவசர உச்சி மாநாடான ஜி7 மாநாடு பெல்ஜியம் தலைநகரான பிரஸ்ஸல்ஸ் நகரில் நேற்று (மார்ச் 24ந்தேதி) நடைபெற்றது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்பட 30 உறுப்பு நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றனர். இதனைத்தொடர்ந்து, ஜி-7 தலைவர்கள் கூட்டத்திலும் ஜோ பைடன் பங்கேற்று ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, ஐரோப்பிய கவுன்சில் அமர்விலும் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
இந்த நிகழ்ச்சிகளின்போது உக்ரைன் மீதான படையெடுப்பால் ரஷ்யா மீது புதிய பொருளாதார தடைகளை விதிப்பதுடன், தற்போதைய தடைகளை மேலும் அதிகரிப்பது பற்றியும் தனது ஆதரவு நாடுகளுடன் ஜோ பைடன் விவாதித்ததாக கூறப்படுகிறது.
முன்னதாக, பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற நேட்டோ உச்ச மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைன் மீதான போரில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ரசாயன ஆயுதத்தை பயன்படுத்தினால் அதற்கு நேட்டோ தக்க பதிலடி கொடுக்கும் என்றார். இந்த பதிலடியானது, ரசாயன ஆயுதத்தை பயன்படுத்துவதின் தன்மையைப் பொறுத்தது என்றும் தெரிவித்ததார்.
மேலும், உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு உதவினால் சீனா கடுமையான பொருளாதார விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் ஜி-20 அமைப்பில் இருந்து ரஷ்யாவை வெளியேற்றவும் அதிபர் ஜோ பைடன் வலியுத்தினார்.