புதுச்சேரி: புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலையொட்டி, பாஜக சார்பில்,வாக்காளர்கள், பாரதிய ஜனதா கட்சியில் சேருமாறு, ஆதார் எண் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. இது சர்சிசையானது இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்து வருகிறது. வழக்கின் இன்றைய விசாரணையின்போது, புதுச்சேரி மாநிலத்தில் பாஜகவை தடை செய்ய வேண்டும என மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வலியுறுத்தினார்.
இந்த வழக்கின் கடந்த மார்ச் மாதம் 24ஆம் விசாரணையின்போது, இது தொடர்பாகப் புதுச்சேரி தேர்தல் ஆணையம் உடனடியாக பதிலளிக்க வேண்டும். எப்படி வாக்காளர்களின் தொலைபேசி எண் கிடைத்தது? அதை எப்படி அரசியல் கட்சி பயன்படுத்தலாம் என்று கேள்வி எழுப்பியது. மேலும் இது குறித்து 26ஆம் தேதி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று புதுச்சேரி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.
இதையடுத்து, உயர்நீதிமன்றம் இந்த வழக்கை மார்ச் 26ந்தேதி மீண்டும் விசாரணை நடத்தியது. அப்போது, இது தொடர்பாக புதுச்சேரி பாஜகவிற்குத் தேர்தல் ஆணையம் காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் விளக்கம் சரியாக இல்லை என அதிருப்தி வெளியிட்ட நீதிபதி, ஆதார் தகவல் எப்படி கசிந்தது என மனுதாரர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார். அதற்கு தேர்தல் ஆணையம் முன்பே விசாரணை நடத்தியிருக்க வேண்டாமா என்று கேள்வி எழுப்பியதுடன், புதுச்சேரி பாஜக தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது என்பதை தேர்தல் ஆணையம் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். மேலும் ஆதார் எண் கசிந்தது எப்படி என்ற தேர்தல் ஆணையத்தின் புகாரை அடிப்படையாகக் கொண்டு ஆதார் ஆணையம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
பின்னர் அடுத்த விசாரணை மார்ச் 30ந்தேதி அன்று நடைபெற்றது. அப்போது, “இந்த வழக்கின் விசாரணை முடியும் வரை, புதுச்சேரியில் ஏன் தேர்தலைத் தள்ளிவைக்கக் கூடாது?” என்றும் புதுச்சேரி தேர்தல் ஆணையத்திடம் உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், வழக்கின் உண்மைத் தன்மை தெரியாமல் தேர்தலை தள்ளிவைப்பது சரியாக இருக்காது என்று கூறினர்.
விசாரணையின்போது, மனுதாரர் ஆனந்த் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் இருக்கக்கூடிய புதுச்சேரியில், ஒவ்வொரு தொகுதியிலும் 950க்கும் மேற்பட்ட வாட்ஸ்-அப் குழுக்களை உருவாக்கியுள்ளனர். அதற்குரிய தொலைபேசி எண்கள், இந்த குழுவிற்கு அட்மின் என இவ்வளவு பெரிய வேலை எப்படி நடந்தது? வாக்காளர்களின் தனிப்பட்ட விவரங்களைத் திருடிய பாஜக, தேர்தல் நடத்தை விதிகளை மீறி இருக்கிறது. இது வாக்காளர்களின் தனி உரிமையைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. தேர்தல் ஆணையத்தால் சுதந்திரமாகச் செயல்பட முடியுமென்றால், இந்த வழக்கின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்,” என்று வலியுறுத்தினார். ஆதார் ஆணையமும் எங்களிடம் இருந்து தகவல்கள் திருடப்பபடவில்லை என்று விளக்கம் அளித்தது. பாஜக தரப்பில் கட்சியினர் வீடு வீடாக சென்று வாக்காளர்களின் மொபைல் எண்களை சேகரித்தாக கூறினர். இதைத்தொடர்ந்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த வழக்குஇன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வைகை, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக பாஜகவின் புதுச்சேரி பிரிவின் அங்கீகாரத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றும் , தேர்தல் ஆணையம் கூறுவதுபோல, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக புதுச்சேரி பாஜக பிரிவு. அதன் செலவுக் கணக்கில் ரூ .14 லட்சம் சேர்க்கப்படுவது போதாது. பாரதிய ஜனதா கட்சியை இடைக்கால தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், வாட்ஸ்அப் மூலம் டிஜிட்டல் பிரச்சாரத்திற்காக வாக்காளர்களின் மொபைல் போன் எண்களை சேகரிக்க கட்சி தொண்டர்கள் வீடு வீடாக சென்றதாக பாஜகவின் புதுச்சேரி பிரிவு கூறுகிறது. அவர்கள் வீடு வீடாக பிரச்சாரம் செய்திருக்கலாம். ஆனால், அதற்கு தேர்தல் ஆணையத்தின் முன் ஒப்புதல் ஏன் பெறப்படவில்லை என்று கேள்வி எழுப்பியதுடன், எஸ்.எம்.எஸ். மூலம் பிரசாரம் செய்த பா.ஜ.க.வின் நடவடிக்கை தனிமனித உரிமை மீறல் என கூறியது.