திருச்சூர்:

திருச்சூர் பூரம் திருவிழாவில் யானைகளின் அணிவகுப்பு உலக பிரசித்தி பெற்றது. இதில் கம்பீர மாக வலம் வரும் தலைமை யானை பங்கேற்க மாநில அரசு தடை விதித்ததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக  விழா நடைபெறுவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

கேரள மாநிலத்தில் ஆண்டு தோறும் கொண்டாடப்படும் பிரபலமான பண்டிகை, திருச்சூர் பூரம் திருவிழா. இவ்விழாவை காண திருச்சூர் மாவட்டம் மட்டுமின்றி மாநிலம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்று சிறப்பிப்பது வழக்கம்.

இந்த ஆண்டு பூரம் திருவிழா மே-13ம் தேதி மற்றும் மே 14-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. அப்போது  அங்குள்ள வடக்குன்னாதர் கோயில் முன்புள்ள மைதானத்தில் கண்கவர் யானைகள் அணிவகுப்பு நடைபெறும்

இவ்விழாவில் நடைபெறும் யானை அணி வகுப்பின்போது, கம்பீரமாக வலம் வரும் யானைக்கு மாநில அரசு தடைவிதித்ததால், மற்றவர்களும் யானைகளின் உரிமையாளர்களும் தங்களது யானையை அழைத்து வர முடியாது என அறிவித்துள்ளனர். இதன் காரணமாக  கேரளாவை ஆளும் மா.கம்யூ., அரசுக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது.

பூரம் திருவிழாவின் முக்கிய நிகழ்வான யானை அணிவகுப்பின்போது, பத்தரை அடி உயரமுடைய 54 வயதான ராமச்சந்திரன் என்ற யானை வலம் வருவது வழக்கம். இந்த யானையை கொண்டு வரக்கூடாது என்று இந்த ஆண்டு  திருச்சூர் மாவட்ட கலெக்டர் தடை விதித்துள்ளார்.

ராமச்சந்திரன் என்ற அந்த யானை கடந்த பிப்ரவரி மாதம் 2 பேரை மிதித்துக் கொன்றுவிட்டது காரணமாக, அந்த யானைக்கு தடை விதிக்கப்பட்டதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.

ஆனால், அதை  ஏற்க மறுத்துள்ளவர்கள்,  பல ஆண்டுகளாக பாரம்பரிய வழக்கப்படி அந்த ராமச்சந்திரன்  யானைதான் மற்ற யானைகளை அணி வகுப்பில் வழி நடத்திச் செல்லும், எனவே அந்த யானை பங்கேற்காவிட்டால் மற்ற யானைகளும் பங்கேற்காது என யானை உரிமையாளர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

அதைத்தொடர்ந்து அரசு சார்பில் தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன்  யானை உரிமையாளர்களை அழைத்து திருவனந்தபுரத்தில் அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, சில நிபந்தனைகளுடன் 45 நிமிடங்கள் மட்டும் அலங்கரிக்கப்பட்ட ராமச்சந்திரன் யானையை பேரணியில் அழைத்துச் செல்ல அரசு தரப்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், இதுதொடர்பாக கேரள உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், கேரள உயர் நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட மறுப்பு தெரிவித்து, இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சித்தலைவரே முடிவு எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவித்து உள்ளது. இதன் காரணமாக அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. இந்த ஆண்டு யானை அணிவகுப்பு நடைபெறுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.